×

நேமம் வடிகால் வாய்க்காலில் காட்டாமணக்கு செடிகளை அகற்றாததால் வயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர்

* கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி நேமம் வடிகால் வாய்க்காலில் மண்டிகிடக்கும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சிங்களாந்தி, பெரிய சிங்காளத்தி , நெடும்பலம், வடபாதி, செம்பியமங்கலம், பாண்டி, கீழபாண்டி, கள்ளிக்குடி, மங்களநாயகிபுரம் உள்ளடக்கிய பகுதிகளில் தற்போது சம்பா சாகுடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் வயல்களில் தேங்கும் மழைநீர் நேமம் வடிகால் பகுதி வழியாக வளவனற்றில் வடிய வேண்டும். ஆனால் நேமம் வடிகால் வாய்க்கால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது.

இந்த வாய்க்கால் பகுதி முழுவதும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகளும், வெங்காய தாமரைகளும் மண்டிக்கிடப்பதால் சிறிய மழை பெய்தாலும் வயல்களில் தேங்கும் மழைநீரானது வடிய வழியில்லாமல் வயல்களில் தேங்குவதால் இந்த பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. வளவனாறு ரூ.45 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு இரு கரைகளும் அகலப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்ற
போதும் தற்போது இந்த ஆறு முழுவதும் 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு வெங்காய தாமரைகள் மண்டிக்கிடப்பதால் நேமம் வடிகால் பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான மழைநீர் வடிய வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேமம் வடிகால், வளவன் வடிகால் பகுதியில் மண்டிக்கிடக்கும் நெய்வேலி காட்டாமணக்கு, வெங்காயதாமரைகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நேமம் வடிகால் வாய்க்கால் மற்றும் வளவனற்றில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : non-removal ,plants ,drainage canal ,Nemam , thiruthuraipoondi,Wild plant ,thiruvarur , farmers, request
× RELATED பீட்ரூட் கீரை மசியல்