கொரோனாவால் ஐந்தரை மாதமாக மூடப்பட்ட ஏற்காடு சுற்றுலா தலம் மீண்டும் திறப்பு

* ஆர்வத்துடன் திரண்ட மக்கள்

*  நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி

சேலம் : ஐந்தரை மாதங்களுக்கு பிறகு ஏற்காடு சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் மலைப்பாதையில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதில் இளைஞர்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 20 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால் ஏற்காடு ஏரி, படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாய்ண்ட், தாவரவியல் பூங்கா, லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், ஐந்திணை பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் கவனம் ஈர்க்கிறது.

ஏற்காட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து பைக் மூலம் ஏற்காட்டிற்கு வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் இரண்டு நாட்கள் ஏற்காட்டில் தங்கி, அங்குள்ள குளிர்ச்சியான சூழலை அனுபவித்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஏற்காட்டில் ரெஸ்டாரண்ட், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டன. தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகள், சுற்றுலா வேன் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஐந்தரை மாதமாக ஏற்காடு சுற்றுலா தலம் மூடப்பட்டிருந்ததால், ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் முதல் ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. அதேபோல் ஐந்தரை மாதமாக மூடப்பட்டிருந்த ஏற்காடு சுற்றுலா தலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இதனால், சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நேற்று ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், மான் பூங்கா, ஏரி உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர். இந்நிலையில், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளது. இதில் இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த சுற்றுலா வேன் உரிமையாளர்கள் கூறியதாவது: ஏற்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்ட், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், 200க்கும் மேற்பட்ட சுற்றுலா வேன், கார் உரிமையாளர்கள், நூற்றுக்கணக்கான தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு ஒரு கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. கொரோனா தொற்று காரணமாக ஐந்தரை மாதத்திற்கு மேலாக சுற்றுலா தலம் செயல்படாமல் இருந்தது. இதன் காரணமாக பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் முதல், ஏற்காடு சுற்றுலா தலம் செயல்பட தொடங்கியது. இதனால் மீண்டும் தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகள், டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதி சுறுசுறுப்படைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

 ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், கடந்த இரு மாதமாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் கூட தோன்றும் பனிப்பொழிவால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் மழையால், ஏற்காட்டில் குளிர்காற்று வீசுவதால்,  சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஆகாயத்தாமரை அகற்றம்

ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் ஒரு பக்கத்தில் அதிகளவில் ஆகாய தாமரை வளர்ந்துள்ளது. இவற்றை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்ைத வலியுறுத்தி வந்த நிலையில், ஐந்தரை மாதத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கியுள்ளதால், ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை  அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுமண தம்பதிகள் வருகை அதிகரிப்பு

ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், மலைப்பாதை பச்சைப்பசேல் என காணப்படுகிறது. மேலும், ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நடப்பு ஆவணி மாதத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளதால், புதுமண தம்பதிகளின் வருகை ஏற்காட்டிற்கு அதிகரித்துள்ளது. இவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையில் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

Related Stories:

>