×

புதுகை அருகே சோக சம்பவம் 5 அடி குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

திருமயம் : புதுகை அருகே மரக்கன்றுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தண்ணீர் சேமிக்க தோண்டப்பட்ட 5 அடி குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சந்தனவிடுதி கிராமத்தை சேர்ந்த குமார் மகன் அன்புசெல்வன்(8). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் விமல்ராஜ்(10). நண்பர்களான இருவரும், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கம்பலம் கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்ப வில்லை.

இதில் சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் விளையாடும் பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் உறவினர்களுடன் சேர்ந்து தேட தொடங்கினர். அப்போது சிலர், கம்பலம் கண்மாய் பக்கம் சிறுவர்கள் சென்றதாக கூறினர். இதையடுத்து கண்மாய் பகுதிக்கு பெற்றோர்கள் சென்றனர். அதே கிராமத்தை சேர்ந்த பழனியப்பனுக்கு சொந்தமான நிலத்தில் மரகன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற தண்ணீர் நிரப்புவதற்காக தோண்டபட்ட குழியின் கரையில் சிறுவர்கள் செருப்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் சந்தேகமடைந்த அவர்கள் குழிக்குள் இறங்கி தேடினர். அப்போது 5 அடி ஆழமுள்ள குழிக்குள் கிடந்த தண்ணீரில் இரண்டு சிறுவர்களும் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவர்களின் உடலை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக தண்ணீர் தேக்கி வைக்க நேற்று முன்தினம் தான் குழி தோண்டப்பட்டது. பெய்த மழையால் குழியில் தண்ணீர் நிரம்பியது. அதேநேரத்தில் குழி கரைகள் இல்லாமல் தரையோடு இருந்ததால் ஆபத்தையும், ஆழமும் தெரியாமல் இறங்கிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Tags : incident ,boys ,Pudukai Two ,pit , Thirumayam,Water, 2 death, young fellows
× RELATED விகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு