×

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் இறந்த பென்னிக்சை தேடி கடையில் காத்திருக்கும் நாய்

*வலைதலங்களில் அனுதாப அலை

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் செல்போன் கடையை உறவினர் நேற்று திறந்தார். அவர் வளர்த்த நாய் பாசத்துடன் பென்னிக்சை தேடி கடை வாசலில் படுத்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு பனைகம்பு கடை, செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த ஜூன் 19ம்தேதி ஊரடங்கை மீறி கடை நடத்தியதாக சாத்தான்குளம் போலீசார் ஜெயராஜ், பென்னிக்சை அழைத்து சென்று தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சிபிசிஐடி போலீசார் இருவர் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றி அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்.ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை  விசாரிக்கும் டெல்லி சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை  தாக்கல் செய்துள்ளனர். பென்னிக்ஸ் வீட்டில் டாமி என்ற நாய் வளர்த்து வந்துள்ளார். அவர் செல்போன் கடைக்கு செல்லும் போது நாயும் உடன் செல்லும். கடந்த இரு மாதங்களாக அவரை காணாமல் தினமும் பூட்டியிருந்த கடைக்கும் வீட்டிற்குமாக அலைந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் வெள்ளாளன்விளையைச் சேர்ந்த பென்னிக்சின் சித்தி ஜோதி மகன் இம்ரான், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் பென்னிக்ஸ் நடத்திய கடையில் நேற்று புதிய செல்போன் கடை திறந்தனர். கடை திறந்திருப்பதை கண்ட டாமி, பென்னிக்ஸை தேடி கடைக்கு வந்து அங்கேயே சுற்றிச்சுற்றி வந்துள்ளது. பின்னர் கடை வாசலில் படுத்து கொண்டது. இது பார்ப்பவர்களை நெகிழச்செய்தது. இதனை அவரது நண்பர்கள் செல்போனில் பதிவேற்றி சமூகவலை தளங்களில் பரவவிட்டனர். இது அனைவரிடமும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pennix ,shop ,police raid , Sathankulam, Fennicks, Dog, Custodial Death
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி