×

ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேற்கு மலை பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து 600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கொடுத்து ஓடுகிறது.

இதனால், நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் ஆகிய கிராமப் பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலங்கள், சொரக்காய்ப்பேட்டை அருகே தடுப்பணை நிரம்பி மழை நீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்து ஓடுகின்றது.
இதனால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, பூண்டி பகுதிகளில் கரையோர கிராமமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கிராமமக்கள் இரவு நேரங்களில் ஆற்றை கடந்து செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், வருவாய் துறை, காவல் துறையினர் தொடர்ந்து கரையோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Collector , River flooding, coastal villagers, Collector warns
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...