×

பெண்ணிடம் செயின் பறிப்பு ஊர்க்காவல் படை வீரர், கல்லூரி மாணவன் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (39). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஜாக்கெட் தைத்து, வாங்கிக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திற்கு ரெட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 3,5 சவரன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இதுகுறித்து விஜயலட்சுமி ஊத்துக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

எஸ்ஐ ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்தார். அவர்களின் பைக்கின் பதிவு எண் ‘ஏபி’ என ஆந்திர மாநிலத்தின் பதிவு எண்ணாக இருந்தது. மேலும், பைக்கில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதை வைத்து ஊத்துக்கோட்டை போலீசார் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆந்திர போலீசார் செயின் திருடியவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தனர். பின்னர், ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அவர்களை விசாரித்ததில், ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குணா (28)  என்பதும் அவர் நாகலாபுரம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவருடன் வந்த உறவினர் தருண் (19), திருப்பதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து மூன்றரை சவரன் செயினை பறிமுதல் செய்த போலீசார்  ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

வக்கீல் வீட்டில் 40 சவரன் கொள்ளை
மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கே.எஸ்.குமார் (36). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு  குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றிருந்தார். இந்திலையில், நேற்று காலை இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.  இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அதில், முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாக எகிறி குதித்து உள்ளே நுழைந்து, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது.இது குறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம ஆசமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : college student Guard soldier , Woman, chain flush, patrolman, college student, arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...