×

நிலத்தில் மின் டவர் அமைக்க எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

திருவள்ளூர்: தனது நிலத்தில் மின் டவர் அமைக்க கூடாது என்று  செல்போன் டவரின் மீது ஏறி விவசாயி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். பூந்தமல்லி அடுத்த நேமம், மேல்மா நகரைச் சேர்ந்தவர் டில்லி (52). இவருக்கு மனைவியும் 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவருக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் வழியாக உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக மின்வாரிய அதிகாரிகள் இவரது விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த டவர் அமைப்பதற்காக அளவீடு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 5 மாதமாக மின்வாரியத் துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த டில்லி நேற்று காலை நேமம் ஊராட்சி ஆன்டர்சன் பேட்டையில் உள்ள செல்போன் டவரின் மீது ஏறிக்கொண்டு தனது நிலத்தில் உயர் மின்னழுத்த டவர்  அமைக்கக்கூடாது, அப்படி அமைக்க முடிவெடுத்தால் குதித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி வட்டாட்சியர் குமார், நேமம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்நாத், துணைத் தலைவர் விஜயா ரமேஷ், துணை வட்டாட்சியர் இனபராஜ், ஆர்.ஐ. புனிதவதி, விஏஓ மகேஷ் குமார், வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்ம பாபி, சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரி, மின்சார உதவிப் பொறியாளர் நசீம், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் அவரது உறவினர்களும் அவரை இறங்கி வருமாறு சமாதானப்படுத்தினர். யாராவது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவேன் என டில்லி மிரட்டினார். இதனால் யாரும் மேலே ஏற முயற்சிக்கவில்லை. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார். அவரை உடனடியாக திருமழிசையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . 


Tags : power tower ,land ,cell phone tower ,suicide , E-tower, protest, cell phone tower, farmer, suicide threat
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!