×

செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் உள்ள பெருமாள் கோயில் குடமுழுக்கு: 12 வாரத்தில் முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான நடைமுறைகளை 12 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் ஸ்ரீவிஜயவரதராஜ பெருமாளுக்கு புராதன கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் உள்ள உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், தூண்கள், கல்மண்டபம், குளம், விமானங்கள், கோபுரம் ஆகியவை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்து, திருப்பணிகளை மேற்கொண்டு கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த கோரி வக்கீல் பி.ஜெகன்நாத் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஜி.கே.முத்துக்குமார், அறநிலையத்துறை தரப்பில் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதில், அறநிலையத்துறை தரப்பில், புராதன கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அந்த அனுமதி கிடைத்த பிறகு குடமுழுக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், குடமுழுக்கு நடத்துவதற்கான நடைமுறைகளை 12 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Papurayanpettai Kudamulukku ,Chengalpattu ,government ,Baburayanpettai Kudamuluku ,ICC , Chengalpattu, Papurayanpet, Perumal Temple, Government, Icord
× RELATED தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம்...