×

‘இந்தி தெரியாது போடா’ திருப்பூரில் டி-சர்ட்டுக்கு குவிகிறது ஆர்டர்

திருப்பூர்: ‘இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக் வைரலானதை தொடர்ந்து அந்த வாசகம் இடம்பெற்ற டி-சர்ட்டுக்கு மவுசு அதிகரித்து திருப்பூரில் ஆர்டர் குவிந்து வருகிறது. தமிழகத்தில் ரெயில்வே, விமானநிலையம், மத்திய அரசு அலுவலகம் போன்றவற்றில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில், ‘இந்தி தெரியாது’ எனக்கூறிய தி.மு.க. எம்.பி. கனிமொழியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா? என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குநர் வெற்றிமாறன் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதன்தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகையர் இந்தி திணிப்புக்கு எதிரான டி-சர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் அணிந்த டி-சர்ட்கள் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ‘ஐ ஆம் ஏ தமிழ் பேசும் இந்தியன்’, ‘இந்தி தெரியாது போடா’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி-சர்ட்களை அணிந்திருந்தார்கள். இந்த டி-சர்ட்கள், தமிழகம் மற்றும் வெளிநாடு தமிழர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. பலரும் இந்த டி-சர்ட்டை விரும்பி அணிந்து வருகின்றனர்.

இதனால் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து, உரிமையாளர் கார்த்தி கூறுகையில், ‘‘இந்தி தெரியாது போடா என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி-சர்ட்களை கேட்டு, தமிழகம் மட்டுமின்றி அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்களுக்கு ஆர்டர் வருகிறது. இதுவரை 6 ஆயிரம் டி-சர்ட்கள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று மட்டும் அமெரிவிக்காவில் இருந்து 5,000 டி-சர்ட்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. ஒரு டி-சர்ட்டை ₹200-க்கு விற்பனை செய்கிறோம். ஆர்டர்கள் அதிகமாக வருவதால் டி-சர்ட்களை தயாரித்து இருப்பு வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

Tags : Tirupur ,Boda , ‘Hindi Don’t Know Boda’ Tirupur, T-Shirt, Order
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...