×

சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்: எண்ணூர் விரைவு சாலை, மஸ்தான் கோயில் தெரு அருகே கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, கன்டெய்னர் லாரிகளை சர்வீஸ் சாலையில் செல்ல போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி, கன்டெய்னர் லாரிகள் சர்வீஸ் சாலையில் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சிபிசிஎல் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல சர்வீஸ் சாலையில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், அங்கு மீண்டும் சாலையை சீரமைக்கவில்லை.

இதனால், குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, சர்வீஸ் சாலையில் கன்டெய்னர் லாரிகள் செல்லும்போது, தூசி பறந்து புகை மண்டலமாக மாறுவதுடன், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதை கண்டித்து மஸ்தான் கோயில் பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : road ,block ,service road , Service Road, Public, Road Stir
× RELATED திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: தமிழக - கர்நாடக போக்குவரத்து பாதிப்பு