×

விண்வெளியில் இருந்து திரும்பிய பயில்வான் எலிகள்: விண்வெளி வீரர்களுக்கு வரப்பிரசாதம்

கேப்கெனவெரல்: விண்வெளியில் நீண்ட நாள் தங்கி இருப்பதால் ஏற்படும் தசை, எலும்பு எடை குறைவை நிவர்த்தி செய்யும், ‘மைட்டி மைஸ்’ மருந்தை எடுத்து கொண்ட எலிகள் விண்வெளியில் இருந்து பயில்வான்களாக பூமிக்கு திரும்பி உள்ளன. விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மாத கணக்கில் தங்கி விட்டு பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்கள் உடல் எடை குறைந்து, தசை மற்றும் எலும்புகள் பலவீனமாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் கனெக்டிக்கட்டில் உள்ள ஜாக்சன் ஆய்வகத்தின் மருத்துவர் செ ஜின் லீ தலைமையிலான ஆராய்ச்சி குழு, கடந்தாண்டு டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் 40 கருப்பு பெண் எலிகளை விண்வெளி மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தது.

சமீபத்தில் இவை  பூமிக்கு திரும்பி வந்தன. அவற்றில், எவ்வித மருந்தும் கொடுக்காமல் அனுப்பிய வைக்கப்பட்ட 24 எலிகள் 18 சதவீதம் எடை குறைந்தும், `மைட்டி மைஸ்’ என்ற மருந்து கொடுக்கப்பட்ட 8 மரபணு மாற்ற எலிகள், இரண்டு மடங்கு உடல் எடையுடன் வந்தன. அவற்றின் உடல் வலிமையும், நாசாவில் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள மற்ற எலிகளுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு வலிமையுடனும் காணப்பட்டது. அதே நேரம், `மைட்டி மைஸ்’ கொடுக்கப்பட்ட, மரபணு மாற்றம் செய்யப்படாத சாதாரணமான எலிகள் விண்வெளியில் இருந்து பயில்வான்கள் போன்று அதிக சதையுடன் பூமிக்கு திரும்பி வந்துள்ளன. இந்த 40 எலிகளும் பூமிக்கு வந்த பிறகு, சாதாரணமான அனுப்பப்பட்ட எலிகள் சிலவற்றுக்கு உடல் எடையை கூட்டுவதற்கான மைட்டி மைஸ் மருந்து கொடுக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களிலேயே அவை அதிக சதையுடன் வளர்ந்து விட்டன. இதன் மூலம், விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட நாள் தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் இனிமேல் தசை, எலும்பு எடை குறைவினால் பாதிக்கப்படுவது சரி செய்யப்படுவதற்கான வழிமுறை கிடைத்துள்ளது. அதே நேரம், எலிக்கு கொடுத்த இந்த மருந்தை மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நீண்ட ஆராய்ச்சிகள், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டாக்டர் செ ஜின் லீ தெரிவித்துள்ளார்.

Tags : space ,astronauts ,Astronaut , Astronaut, apprentice mice, astronaut, bounty
× RELATED மனவெளிப் பயணம்