×

வெண்நுரை படலம் கிளம்பும் விவகாரம்; மெரினா கடற்கரை பராமரிப்பில் அலட்சியம் காட்ட வேண்டாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: ‘சென்னை மெரினா கடற்கரை பராமரிப்பில் அலட்சியம் காட்டக்கூடாது,’ என தேசியப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து திருவான்மியூர் வரை கடற்கரை முழுவதும் நான்கு நாட்களுக்கும் மேலாக வெள்ளை நுரைப் படர்ந்து இருந்தது. சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவு, சாக்கடை நீர் கடலில் கலப்பது தான் இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறினர். ஊடங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏ.கே.கோயல், ஆணையர்கள் எஸ்.பி.வாங்டி மற்றும் நஜின் நந்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர்,‘‘இயற்கையாகவே மழை மற்றும் நல்ல சுத்தமான தண்ணீர்  கடல் உப்புநீருடன் கலக்கும் போது ஏற்படும் மோதலினால் வெண் நுரை உருவாகும். இதனால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,’’ என்று வாதிட்டார். இதையடுத்து, ஆணையர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘சென்னை மெரினா கடற்கரையில் எதனால் இதுபோன்ற வெண்நுரை ஏற்படுகிறது என்பது பற்றி நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மாநில சுற்றுச்சூழல் அலுவலகமும்,

சென்னை மாநாகராட்சி யும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய சுற்றுச்சூழல், மாநில சுற்றுச்சூழல் மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் தலா உறுப்பினர் என்ற விகித்ததில் மூன்று பேர் சேர்ந்த குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் அடையாறு ஆற்று நீர் கலக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சென்னை மெரினா கடற்கரையை பராமரிக்கும் விவகாரத்தில் எந்தவித அலட்சயமும் காட்டாமல், அதனை பாதுகாக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கையும் முடித்து வைத்தனர்.

Tags : Marina Beach: National Green Tribunal , White foil, Marina Beach, National Green Tribunal
× RELATED சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க...