×

வேலை இழப்பு, வரலாறு காணாத ஜிடிபி வீழ்ச்சிக்கு அரசின் கொள்கைகளே காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான வேலை இழப்பு, வரலாறு காணாத ஜிடிபி வீழ்ச்சிக்கு பாஜ தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையானது ஏழை மக்கள் மீதான தாக்குதலாகும், கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார்.

இந்நிலையில், “வேலைக்காக குரல் கொடுப்போம்” என்ற தலைப்பில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் 10 மணி நேர பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான வேலை இழப்பு, வரலாறு காணாத உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சிக்கு (ஜிடிபி) மோடி அரசின் கொள்கைகள்தான் காரணம். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அது நசுக்கி விட்டது. அவர்களின் குரல்களை மத்திய அரசை கேட்க வைக்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், கடந்த  6 ஆண்டுகளில் 12 கோடி வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு மாறாக, 14 கோடி வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தற்போது விழித்துக் கொண்டனர். அரசிடம் இருந்து இதற்கான பதிலை கேட்கின்றனர்,” என்றார்.

‘குரல் கொடுங்கள்’
காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாஜ அரசின் ஒன்றன்பின் ஒன்றான அழிவுகரமான கொள்கையானது கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. அவர்களின் எதிர்காலத்தை இருட்டாக்கி உள்ளது. வேலைக்காக குரல் கொடுப்போம் பிரச்சாரத்தில் இணையுங்கள். பாஜ அரசின் தவறான செயல்களுக்கு எதிராக குரல் கொடுங்கள்,’ என  கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக திட்டமிட்ட போராட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ134கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “கொரோனா வைரசானது எங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத சவாலாகும். ஆனால் நாம் அதற்கு எதிராக பிரதமர் மோடி தலைமையில் நன்கு திட்டமிட்ட முறையில் போராடி வருகிறோம். நமது முயற்சிகளை உலகம் அங்கீகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

Tags : Rahul Gandhi , Job loss, GDP fall, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…