×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; அரை இறுதியில் அசரென்கா: செரீனா முன்னேற்றம்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றார். கால் இறுதியில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்சுடன் மோதிய அசரென்கா 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அவர், மெர்டன்சின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். அசரென்காவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய மெர்டன்ஸ் டோட்டல் சரண்டராக, அசரென்கா 6-1, 6-0 என நேர் செட்களில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 13 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் - ஸ்வெடனா பிரான்கோவா (பல்கேரியா) மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்து பின்தங்கிய செரீனா, பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது. அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 11வது ஆண்டாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள செரீனா, ஏற்கனவே 6 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். கால் இறுதியில் விளையாடிய வீராங்கனைகளில் செரீனாவுக்கு 3 வயது பெண் குழந்தையும்,

பிரான்கோவுக்கு 2 வயது மகனும், அசரென்காவுக்கு 3 வயது மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் - விக்டோரியா அசரென்கா, நவோமி ஒசாகா (ஜப்பான்) - ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) மோத உள்ளனர். தீம் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (2வது ரேங்க்) 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் 7-6 (8-6), 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் சக வீரர் ஆந்த்ரே ருப்லேவை வீழ்த்தினார்.

அரை இறுதியில் டொமினிக் தீம் - டானில் மெட்வதேவ், பாப்லோ கரினோ புஸ்டா (ஸ்பெயின்) - அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) மோதுகின்றனர்.

Tags : Semi-final Azarenka ,Serena , US Open Tennis, Azarenka, Serena, Progress
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’