×

ரூ.65 கோடியில் நடக்கும் காட்டூர்-தத்தமஞ்சி புதிய நீர்த்தேக்க பணி எனக்கூறி லாரிகளில் லோடுலோடாக எம்எல்ஏ ஆட்கள் மணல் கொள்ளை: ஏரி மண்ணால் கரைகளை பலப்படுத்தி மோசடி; பாசன ஏரிகளை குடிநீர் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு

* புதிய நீர்த்தேக்க பணிக்காக ஏரிகளை ஆழப்படுத்துவதாக கூறி தினமும் இரவு நேரங்களில் அரசு பணி என ஸ்டிக்கர் ஒட்டிய லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது.
* அதிமுக எம்எல்ஏ தலைமையில் இந்த மணல் கடத்தல் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த மணலை லாரிகளில் எடுத்து சென்று அதிகாரிகள் துணையுடன் எம்எல்ஏவின் பினாமி ஒப்பந்த நிறுவனம் முறைகேடாக விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான லோடு மணல் கடத்தப்பட்டுள்ளது.

சென்னை: காட்டூர்-தத்தமஞ்சி புதிய நீர்த்தேக்க பணி எனக்கூறி எம்எல்ஏவின் ஆட்கள் லாரிகளில் லோடு, லோடாக மணல் கொள்ளை நடத்தி வருவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிகளவில் ஏரிகள் இருந்தது. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் திருவள்ளூரில் 1,256 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 909 ஏரிகளும் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களை ஏரிகளின் மாவட்டங்கள் என்று அழைத்து வந்தனர். இந்த மாவட்டங்களில் பாசன தேவை மற்றும் இதர தேவைகளுக்கு ஏரிகளின் மூலம் கிடைக்கும் நீர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மட்டும் 474 ஏரிகள் இருந்தது. ஆனால், நகர மயமாதல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதன் காரணமாக 474 ஏரிகள் தற்போது 43 ஏரி மட்டுமே உள்ளது. இந்த ஏரிகளிலும் கழிவு நீர் கலந்து அந்த ஏரிகளில் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரியை நம்பிக்கை இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஏரிகளும் 11 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், ஆண்டு முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக புதிதாக நீர்த்தேக்கம் அமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகையை இணைத்து புதிய நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதே போன்று ஒரத்தூர்-ஆரம்பாக்கத்தை இணைத்து புதிய நீர் தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஏரிகள் மூலம் கிடைக்கும் நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி புதிய நீர்த்தேக்கமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த புதிய நீர் தேக்கம் மூலம் வருங்காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், ரூ.65 கோடி செலவில் தற்போது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா காட்டூர் மற்றும் தத்தமஞ்சி இரட்டை ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி புதிய நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 58 மில்லியன் கன அடியாக உள்ள இந்த ஏரிகளின் நீர் இருப்பு 350 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும். சென்னை மாநகரத்தின் வடக்கு பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஏரிகள் மூலம் 5804 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த சூழலில் ஏரிகளை இணைத்து குடிநீருக்கு வழங்கினால், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 31ம் தேதி இப்பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அரக்கோணத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் பணிகளை தொடங்கியது. இந்த புதிய நீர்த்தேக்க பணிக்காக ஏரிகளை ஆழப்படுத்துவதாக கூறி தினமும் லாரிகளில் லோடு, லோடாக மணல் கடத்தப்படுகிறது.

இரவு நேரங்களில் அரசு பணி என ஸ்டிக்கர் ஒட்டிய லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. ஒரு அதிமுக எம்எல்ஏ தலைமையில் இந்த மணல் கடத்தல் நடப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஒரு பகுதியில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் மறுபக்கத்தில் ஏரியில் மணல் அள்ளும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மணலை லாரிகளில் எடுத்து சென்று அதிகாரிகள் துணையுடன் ஒப்பந்த நிறுவனம் முறைகேடாக விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான லோடு மணல் கடத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

மேலும், ஏரிகளில் இருந்து அள்ளும் மணலை வைத்து கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக ஏரிகள் புனரமைப்பு பணிக்கு வெளியில் இருந்து எடுத்து வந்து மணல் மூலம் கரையை பலப்படுத்த வேண்டும். ஆனால், ஏரியில் இருந்து அள்ளி கரைகளை ஒப்பந்த நிறுவனம் பலப்படுத்தி மோசடி நடந்து வருகிறது. இந்த நிலையில், தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பணைக்கு கூட ஏரி மண்ணை தான் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாசன பயன்பாட்டில் உள்ள காட்டூர்-தத்தமஞ்சி ஏரிகளை புதிய நீர் தேக்கம் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாய சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் இப்பணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காட்டூர் விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘காட்டூர்-தத்தமஞ்சி நீர்த்தேக்க பணிக்கு அரசு எடுத்த முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் காட்டூர்-தத்தமஞ்சி இணைக்கும் நீர்த்தேக்கம் என்று கூறி உள்ளதால் அதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

காட்டூர் ஏரி ஏற்கனவே ஆழமாக உள்ளது. அதனை தத்தமஞ்சேரி ஏரியுடன் இணைப்பதால் எங்களுடைய விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து சிறுவாபுரி சிருலப்பாக்கம் வழியாக வரும் நீர் 20 ஆண்டுகளுக்கு மேலாக காட்டூர் விவசாயிகள் நீர் பாசனத்துக்கு பயன்படுத்தி வருகிறோம். காட்டூர் தத்தமஞ்சி இணைப்பு என்று பணி நடைபெற்றால் அதை எதிர்க்கவும் போராடுவோம்’ என்றனர். மேலும், இது குறித்து காட்டூர் -தத்தமஞ்சி கிராம மக்கள் கூறுகையில், காட்டூர்-தத்தமஞ்சி ஏரிகளை இணைக்கும் பணிக்கான பூஜை கடந்த 2 மாதத்துக்கு முன்பு போடப்பட்டது.

பொதுமக்களும் விவசாயிகளும் இத்திட்டத்தை வரவேற்கிறோம். அதனால், இதனை அரசியல்வாதிகள் துணையுடன் சமூக விரோதிகள் சேர்ந்து கொண்டு பகல் நேரத்தில் கரையை பலப்படுத்துதல் சவுடு மண்ணை எடுத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மணலை சேமித்து வைத்துக் கொண்டு அதை கொள்ளை லாபம் அடைகின்றனர். இதனை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் துணையுடன் மணல் கொள்ளை இரவு நேரத்தில் நடைபெறுகிறது. இதனை நாங்கள் இரு கிராம பொது மக்களும் வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றனர்.

Tags : lakes ,conversion ,reservoir project Farmers ,Kattur-Dattamanji ,shores ,Kattur-Dattamanchi , Rs 65 crore, Kattoor-Dattamanchi, new reservoir work, lorry, MLAs, sand robbery, farmers protest
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!