×

தொற்றுக்கான அறிகுறி இருந்தும் நெகடிவ் ஆனவர்களுக்கு மீண்டும் பரிசோதனை: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சென்று பரிசோதனை நடத்தியவர்களுக்கு ஒருமுறை நெகடிவ் வந்திருந்தாலும், மீண்டும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்துங்கள்,’ என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்றவை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்ட ஏராளமானவர்களுக்கு பரிசோதனையில் ‘நெகடிவ்’  முடிவுகள் வந்துள்ளன.

அதாவது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது அர்த்தம். ஆனால், இந்த முடிவு வந்தவர்கள் பலருக்கு பின்னாளில் தொற்று உறுதியாகி, அவர்களுக்கே தெரியாமல் மக்களுடன் கலந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஒருமுறை நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்தவர்களை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதனை நடத்தும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகும், இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழகமும் உத்தரவிட்டுள்ளன.

இது தொடர்பாக இவை இரண்டும் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
* ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என்று வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
* இதனால் மாவட்டங்கள், மாநிலங்கள் அளவில் அதிகாரிகள் அல்லது குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிகுறி இருந்து பரிசோதனையில் நெகடிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.
* பெரிய அளவிலான மாநிலங்களில் அறிகுறி இருந்து நெகடிவ் வந்தவர்களுக்கு மறுபரிசோதனை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது.
* காய்ச்சல், இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ரேபிட் கிட் சோதனையில் நெகடிவ் என்று வந்தாலும், அறிகுறியற்றவர்களிடம் மேற்கூறிய பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டாலும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஆர்டி-பிசிஆர் மூலம் மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* இதன் மூலம், கொரோனா நோயாளியும் தவற விடப்படவில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* முன் கூட்டி அறிவதன் மூலம், நெகட்டிவ் பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதிப்பது எளிதாக்கப்படும்.
* ரேபிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து, கொரோனா இல்லை என்பதை மாவட்ட, மாநில அளவிலான அதிகாரி அல்லது குழு உறுதி செய்ய வேண்டும்.
* இதன் மூலம், எந்தவொரு பாசிடிவ் நோயாளியும் தவறவிடப்படவில்லை என்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* லேசாக நினைத்து விடாதீர்கள்
பிரதமரின் மீன் வள திட்டத்தை தொடங்கி வைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், ‘‘கொரோனா வைரசை மக்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது. விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் தவறாமல் முகக்கவசம் அணியுங்கள். மனித இடைவெளியை பின்பற்றுங்கள். கொரோனாவிடம் இருந்து தப்பிக்க, இப்போதுள்ள ஒரு வாய்ப்பு இதுதான். பாதுகாப்பாகவும், நல்ல உடல் நலத்தோடும் இருங்கள். குடும்பத்தில் உள்ள முதியவர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்,’’ என்றார்.

* லட்சத்தை நெருங்கியது
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக, நேற்று முன்தினம் ஒரே நாளில் 95,735 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,65,864 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 34,71,784 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 9,19,018 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பால் 1172 பேர் புதிதாக இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 75 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 5 கோடி 29 லட்சத்து 34 ஆயிரத்து 433 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 11,29,756 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

Tags : Re-examination ,states , Sign of infection, negative, re-examination, for all states, federal government
× RELATED பேரையூரில் உயிரிழந்த இளைஞர் உடலை மறு...