×

தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து 3 நாளில் டிஸ்சார்ஜ் ஆனவர் வீடு திரும்பிய 3 நாளில் மரணம்: உறவினர்கள் கதறல்

நெல்லை: கொரோனா பாதிப்பால் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர் 3 நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டஅவர் நேற்று திடீரென உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் ராஜா சுப்பிரமணியன் (49). அங்கு ஸ்வீட் ஸ்டால் மற்றும் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்புடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் சோர்வடைந்து சுயநினைவை இழக்கும் நிலைக்கு சென்றதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை கடந்த 8ம் தேதி மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலை மோசமானதால் அன்றிரவே நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் வழங்கப்பட்ட இறப்பு விவரத்தில் கொரோனா சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கொரோனா பாசிட்டிவ் என சேர்க்கப்பட்டு 3 நாட்களில் குணமாகி விட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டவர், மீண்டும் உடல் நலக்குறைவால் தென்காசி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இவருக்கு மனைவியும், கல்லூரியில் படிக்கும் மகளும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டதால் கடையம் அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார். அவர்களது அறிவுரைப்படி 3ம் தேதி தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என உறுதியானது. ஆனால் அவரை 6ம் தேதி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 8ம் தேதி மதியம் தென்காசி அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு மயக்க நிலையில் பாதிப்பு இருந்ததால் அவர்களே நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கொரோனா இல்லை என்று 3 நாட்களில் திருப்பி அனுப்பி விட்டு இறந்த பின்னர் கொரோனா சந்தேகம் என சான்று கொடுத்துள்ளனர். இது மருத்துவ சிகிச்சை குறைபாட்டையே காட்டுகிறது. குடும்பத் தலைவனை இழந்த அவரது மனைவி, குழந்தைகள் தவிக்கின்றனர் என்றனர்.

Tags : Tenkasi Government Hospital ,Corona ,home ,Relatives , Tenkasi, Government Hospital, Corona, discharged in 3 days, returned home, died in 3 days, relatives roared
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு