×

சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கு கட்டண சலுகை ரத்து: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எப்போதும் போல் சலுகைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு என 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் கட்டண சலுகைகள் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  

இதைபோல் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்களுடன் செல்லும் உதவியாளர்கள் குளிர்சாதன வசதி வகுப்புகளில் 50 சதவீதம், ஸ்லீப்பர் கிளாஸ் வகுப்புகளில் 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று மாணவர்கள் மற்றும் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட்டுகளில் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட  சிறப்பு ரயில்களில் கட்டணம் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சமூகவலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது.

இந்நிலையில் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்: ரயில்களில் வயதானவர்கள், தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், கேன்சர், எய்ட்ஸ், கிட்னி நோய் என 11 நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் கட்டண சலுகை வழங்கப்படும். தமிழகத்தில் 7ம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து வயதானவர்களின் நலன்கருதி அவர்களின் பயணத்தை தவிர்க்கும் வகையில் ரயிலில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மற்றபடி ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு கட்டண சலுகைகள் எதுவும் ரத்து செய்யபடவில்லை எப்போதும் போல் வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

* மதுரையில் மறுப்பு
ரயில்வே நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் கேன்சர், எய்ட்ஸ் போன்ற 11 வகையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மதுரை ரயில் நிலையத்தில் முறையான அறிவிப்பு வராததால் யாருக்குமே கட்டண சலுகை வழங்குவதில்லை என்கின்றனர்.

Tags : senior citizens ,Cancellation ,Railway , Special train, senior, fare concession, cancellation, railway officials informed
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...