×

நதி நீர் பிரச்னை தொடர்பாக இன்று தமிழகம்-கேரளா பேச்சுவார்த்தை: அரசு செயலாளர் மணிவாசன் தலைமையில் குழு சென்றது

சென்னை: நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா இடையே இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழகம் மற்றும் கேரளா இடையே சிறுவாணி அணை, பரம்பிகுளம்-ஆழியாறு, ஆணைமலை ஆறு, புன்னம்புழா ஆகிய ஆறுகளின் நீர் பங்கீட்டில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகின்றது. இதுதவிர முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே தீர்வு எட்டியபாடில்லை. இந்த விவகாரம் குறித்து கடந்தாண்டு செப்டம்பர் 25ம் தேதி கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

மேலும் இருமாநில நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த இரு மாநிலத்திலும் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் தொடர்பாக பேசவும், பாண்டியாறு-புன்னம்புழா என்கிற புதிய திட்டத்தை செயல்படுத்த ஆராய புதிய குழு ஒன்று பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதே போன்று கேரளாவிலும் நீர்வளத்துறை செயலாளர் அசோக் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, டிசம்பர் 12ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் தலைமையில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் டாக்டர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கேரளா புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் சுற்றுலா மேம்பாட்டு கழக ஓட்டலில் தமிழக-கேரளா மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது. நதி நீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

Tags : Manivasan ,talks ,committee ,Tamil Nadu ,Kerala , River water issue, today, Tamil Nadu-Kerala, talks, chaired by Secretary of State Manivasan
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்