×

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் விமானப்படையில் 5 ரபேல் சேர்ப்பு: விழாவில் பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்பு

அம்பாலா: பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று நடந்த விழாவின் மூலம், விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ 59,000 கோடிக்கு வாங்க 2016ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இவற்றில் 30 போர் விமானங்களாகவும், 6 பயிற்சி விமானங்களாகவும் பயன்படுத்தப்பட உள்ளன. ஒப்பந்தத்தின்படி, இதுவரை 10 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் முதல் கட்டமாக, 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 27ம் தேதி பிரான்சில் இருந்து புறப்பட்டு இந்தியாவை வந்தன. இவை அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவற்றை விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான விழா, அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா, பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், பாதுகாப்பு துறை செயலர் அஜய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில், ரபேல் விமானங்களுக்கு பாரம்பரியமிக்க சர்வமத பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, விமானப்படையில் இணைப்பதற்காக ஊர்ந்து வந்த ரபேல் விமானங்களுக்கு இருபுறமும் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள், சராங் ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு மரியாதையும், சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ``ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளுக்கு குறிப்பாக, நாட்டின் இறையாண்மையை சீண்ட நினைக்கும் நாடுகளுக்கு ஒரு மிகப் பெரிய, கடுமையான எச்சரிக்கையாகும்.

தற்போது லடாக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், விமானப் படையில் ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலம், எல்லையில் படைகளின் பலம் வலுப்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கை அளிக்கிறது,’’ என்றார். பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பேசிய போது, ``ராணுவ திறனில், இந்தியா உலக தரத்தை எட்டியுள்ளது. ரபேல் என்றால் `பலத்த காற்று’ அல்லது `நெருப்பு வெடி’ என்று அர்த்தம். இந்தியாவுக்கு உலகின் மிகச்சிறந்த போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது. `மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய ராணுவ தளவாட உற்பத்தி பொருட்களை உலக சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்ல பிரான்ஸ் நிச்சயம் உதவும்,’’ என குறிப்பிட்டார்.

* ரபேலின் தனிச்சிறப்பு
ரபேல் போர் விமானம் பல்வேறு ஏவுகணைகள், ஆயுதங்களை தாங்கி செல்லும் வலிமை படைத்தவை. இலக்கை குறிவைத்து தாக்குவதிலும், வான்வெளியில் அதிக வேகத்துடனும் பறக்கும் திறன் கொண்டது. இதன் ஒரு பகுதியில், ஐரோப்பாவின் எம்பிடிஏ.வின் தயாரிப்பான கண்ணுக்கு புலப்படாத வேகத்தில் பாய்ந்து தாக்கும் மெட்டர் ஏவுகணைகளும், போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் ஸ்கல்ப் உள்ளிட்ட ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை எப்போதுமே விமானத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது இதன்
கூடுதல் சிறப்பு.

* இந்தியா-ஜப்பான் ராணுவ ஒப்பந்தம்
இந்தியா-ஜப்பான் இடையே ராணுவ தளவாடங்களை பரிமாறி கொள்ளும் பரஸ்பர சேவை ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் இந்திய பாதுகாப்பு துறை செயலர் அஜய் குமார், ஜப்பான் தூதர் சுசூகி சடோஷி கையெழுத்திட்டனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தியா - ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், இப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை மேம்படுத்த இரு தரப்பிலும் ராணுவ தளவாடங்களை பரஸ்பரம் பரிமாறி கொள்ளும் சேவை வழங்கப்பட உள்ளது.

* தோனி வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது டிவிட்டரில், `உலகின் மிகச்சிறந்த 4.5 தலைமுறை போர் விமானம் என்று நிரூபிக்கப்பட்ட ரபேல், உலகின் தலைசிறந்த விமானிகளின் கையில் கிடைத்திருக்கிறது. இந்திய விமானப்படையின் பல தரப்பட்ட போர் விமானங்களுடன் இணைந்து, எதிரிகளை ரபேலும் துவம்சம் செய்யும். இதனால் கொல்லப்படும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மிராஜ் போர் விமானங்களை மிஞ்சியதாக ரபேல்  இருந்தாலும், சுகோய்-30 எனது விருப்ப போர் விமானமாகும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Rafael ,Lion ,ceremony ,French ,Air Force , Enemy, Lion's Dream, Air Force, 5 Rafael enlistment, French Minister at the ceremony, participation
× RELATED நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்