×

ஐ.பெரியசாமி எம்எல்ஏ முயற்சியால் குடகனாற்றில் தண்ணீர் திறப்பு

சின்னாளபட்டி: திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏவின் சொந்த செலவில் தூர்வாரப்பட்ட குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் கூழை ஆறு மூலம் இந்த நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும். இந்த நீர்த்தேக்கம் நிறையும்போது, குடகனாற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால், நீர்த்தேக்கம் நிரம்பவில்லை. நீர்த்தேக்கம் நிரம்பாததால், குடகனாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் குடகனாறு வறண்டு, புதர் மண்டி கிடந்தது. இதனால் குடகனாறு பாய்ந்து செல்லும் வழியோர கிராமங்களான சீவல்சரகு, வக்கம்பட்டி, வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றது. நீர்மட்டம் சரிந்ததால், பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏவின் சொந்த செலவில் ரூ.90 லட்சம் செலவில் 27 கிமீ தொலைவிற்கு குடகனாறு தூர்வாரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூழை ஆற்றில் இருந்து குடகனாற்றுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. தற்போது குடகனாற்றில் 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் சீவல்சரகு ஊராட்சி பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள் குடகனாற்றில் இறங்கி தண்ணீரை தொட்டு வணங்கி வழிபட்டனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘ஐ.பெரியசாமி எம்எல்ஏ முயற்சியால் எங்களது பகுதிக்கு தண்ணீர் வந்துவிட்டது’’ என்றனர். இது குறித்து ஐ.பெரியசாமி  கூறுகையில், ‘‘குடகனாற்றில் 27 கிமீக்கு தூர்வாரி  முட்செடிகளை அகற்றியதால் தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆத்தூர் தொகுதி மக்கள் மட்டுமின்றி,  வேடசந்தூர் பகுதி மக்களும் பயனடைவார்கள்’’ என்றார். இந்த தண்ணீர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள தாமரைக்குளம், பொன்னிமாந்துரை மற்றும் அணைப்பட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது.

Tags : Water opening , I. Periyasamy MLA, Kudakanaru, Water Opening
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!