×

‘இந்தி தெரியாது போடா’ டி-சர்ட்டுக்கு திடீர் மவுசு: திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் குவிகிறது

திருப்பூர்: ‘இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக் வைரலானதை தொடர்ந்து அந்த வாசகம் இடம்பெற்ற டி-சர்ட்டுக்கு மவுசு அதிகரித்துள்ளது. திருப்பூர் பிரிண்டிங் நிறுவனங்களுக்கு அதற்கான ஆர்டர் குவிந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய தி.மு.க. எம்.பி. கனிமொழியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா? என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக பேட்டியில் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகையர் இந்தி திணிப்புக்கு எதிரான டி ஷர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் டி ஷர்ட்கள் அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. ‘ஐ ஆம் ஏ தமிழ் பேசும் இந்தியன்’, ‘ஹிந்தி தெரியாது போடா’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி ஷர்ட்களை இவர்கள் அணிந்திருந்தார்கள்.இந்த டி ஷர்ட்கள், தமிழகம் மற்றும் வெளிநாடு தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில, இதுபோன்ற வாசகங்கள் கொண்ட டி ஷர்ட்டை பலரும் விரும்பி அணிந்து வருகின்றனர். இதனால் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்துக்கு இதுபோன்ற டி ஷர்ட்டுகளை தயார் செய்து தரக்கூறி ஆர்டர்கள் வந்தவாறு உள்ளது. இதுகுறித்து பிரிண்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்தி கூறுகையில், ‘‘இந்தி தெரியாது போடா என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி ஷர்ட்களை கேட்டு, தமிழகம் மட்டுமின்றி அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்களுக்கு ஆர்டர் வருகிறது. இதுவரை 6 ஆயிரம் டி ஷர்ட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் ஆர்டர்கள் வந்தபடி உள்ளது’’ என்றார்.



Tags : companies ,Tirupur , ‘Hindi theriyathu poda,T-shirt,Tirupur companies
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...