×

கல்லூரி மாணவியுடன் கணவர் ஓட்டம்: 2 மகன்களை எரித்து கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை

அறந்தாங்கி: கல்லூரி மாணவியுடன் கணவர் ஓடியதால் மனமுடைந்த மனைவி 2 மகன்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (45). விவசாயி. இவரது மனைவி ராதா (34). இவர்களது மகன்கள் அபிஷேக் (13), அபிரித் (9). இருவரும் 8ம் வகுப்பு, 4ம் வகுப்பு படித்து வந்தனர். முத்து, அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டையைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது தெரிந்த மனைவி கணவரை கண்டித்து வந்துள்ளார். மாணவியின் வீட்டாரும், முத்துவை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முத்து, மாணவியை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டாராம். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், அறந்தாங்கி போலீசார் முத்து மீது மாணவியை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கணவர் கல்லூரி மாணவியுடன் ஓடியதை கேள்விப்பட்ட ராதா அவமானத்தில் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தனது மகன்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு, தானும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவர்கள் அலறும் சத்தம் கேட்டும், புகை வந்ததை பார்த்தும் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் ஓடிவந்து கதவை உடைத்து தீயை அணைத்தனர். இதில் ராதாவும், அபிரித்தும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அபிஷேக் படுகாயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவனும் இறந்தான். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த 3 பேரின் உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியுடன் கணவர் ஓடியதால் அவமானத்தில் மகன்களை எரித்துகொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூக்க மாத்திரை கொடுத்து...
மாணவியுடன் ஓடிபோன முத்து இதுபோல் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். பிள்ளைகள் பெரியவர்களாகி வருவதால் திருந்தும்படி கணவரை கண்டித்து வந்துள்ளார். இதனால் எப்போதும் தகராறு ஏற்படும். இந்நிலையில் கணவர் திருந்தி விடுவார் என எண்ணி இருந்த நிலையில் அவர் மாணவியுடன் ஓடியதால் அவமானத்தில் இனி அவர் திருந்த வாய்ப்பில்லை என நினைத்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் நேற்று மாலையே 2 மகன்களுக்கும் பாலில் தூக்கமாத்திரை கலந்துகொடுத்துள்ளார். மகன்கள் தூங்கியதும் அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.Tags : sons ,college student ,death ,suicide , College student, husband, flow, 2 sons, suicide
× RELATED மதுரை செல்லூரில் பெற்றோரின்...