×

NEP-2020-ன் கீழ் “21-ம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” குறித்த மாநாடு: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை உரை.!!!

புதுடெல்லி:  புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றவுள்ளார். நாட்டின் கல்வி முறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களுடன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பள்ளி கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இம்மாநாட்டில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், அனைத்து மாநில கவர்னர்கள், கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார்.

அப்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதுபற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதாக பாராட்டினார். அதோடு தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் புரிந்து கொண்டு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது அரசின் கல்விக் கொள்கை அல்ல. நாட்டிற்கான கல்விக் கொள்கை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில்,  தேசிய கல்வி கொள்கை- 2020 (NEP-2020) இன் கீழ் “21 ஆம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றவுள்ளார். சிக்ஷா பர்வின் ஒரு பகுதியாக செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கல்வி அமைச்சகம் இந்த இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,Conference ,speech ,NEP , Conference on “School Education in the 21st Century” under NEP-2020: Prime Minister Modi's speech tomorrow via video. !!!
× RELATED பிரதமர் மோடி ஆந்திராவில் பிரசாரம்:...