×

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யு.எஸ்.ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆடவர் காலிறுதி போட்டியில் ரஷ்யாவின் இளம் டென்னிஸ் நட்சத்திரங்களான டேனில் மெட்வடேவும் (24), ஆண்ட்ரே ரப்லேவும் (22) மோதினர். முதல் செட்டில் இருவருமே தங்களது சர்வீஸ்களை இழக்காமல் முன்னேறினர். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரில் தனது துல்லியமான சர்வீஸ்கள் மூலம் ரப்லேவை திணறடித்த மெட்வடேவ், டை பிரேக்கர் பாயின்ட்டுகளில் 8/6 என்ற கணக்கிலும், முதல் செட்டை 7-6  என்ற கணக்கிலும் வென்றார்.

டை பிரேக்கரை இழந்த சோர்வில் இருந்த ரப்லேவ், 2வது செட்டில் பிரகாசிக்கவில்லை. அவரது சர்வீஸ்களில் பெரும்பாலானவை கோட்டுக்கு வெளியே செல்ல, 2வது செட்டை 6-3 என மெட்வடேவ் எளிதாக கைப்பற்றினார். இருப்பினும் 3வது செட்டில் எழுச்சி கொண்டு எழுந்த ரப்லேவ், அந்த செட்டில் ஒரு கேமையும் இழக்காமல், சரிக்கு சரியாக முன்னேறினார். இதனால் அந்த செட்டும் டை பிரேக்கரை அடைந்தது. டை பிரேக்கரிலும் ரப்லேவ் கடுமையாக போராடினார். ஆனால் அவரது சர்வீஸ்களில் வேகம் குறையவே அதை மெட்வடேவ் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அந்த டை பிரேக்கரை 7/5 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் 3வது செட்டை 7-6 என வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தனது வெற்றி குறித்து மெட்வடேவ் கூறுகையில், ‘‘இப்போட்டியில் ரப்லேவ் எனக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். ஆனால் ஏற்கனவே பலமுறை ரப்லேவுடன் ஆடியிருக்கிறேன். அதனால் அவரது மூவ்களை என்னால் எளிதாக கணிக்க முடிந்தது. அதனால் டை பிரேக்கர்கள் மூலம் எனக்கு வெற்றி வசமானது. எதிர்காலத்தில் ரப்லேவ் நிச்சயம் அச்சுறுத்தும் வீரராக உருவெடுப்பார்’’ என்று தெரிவித்தார்.



Tags : Russian ,Danil Medvedev ,tennis semifinals ,US Open , U.S, Open Tennis, Russian player ,Daniel Medvedev
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...