×

உழவர் நிதி உதவி திட்டத்தில் சேலத்தில் மேலும் ஒரு கணினி மைய உரிமையாளர் கைது! - சி.பி.சி.ஐ.டி., தீவிர விசாரணை!!!

சேலம்:  சேலத்தில் உழவர் நிதி உதவி திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ள மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உழவர் நிதி உதவி திட்டத்தில், முறைகேடு செய்தது தொடர்பாக, சுமார் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி.,  போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் மோசடி செய்த 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வசித்து வந்த கலையரசனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் 3வது நபராக கைது செய்துள்ளனர்.

மேலும் பிடிபட்ட கலையரசன் கோனூரில் கணினி மையம் வைத்து போலியான ஆவணங்களை தயாரித்து மோசடிக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 48 பேரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டவர்களிடம் சுமார் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மோசடியில் தொடர்புடைய வேளாண்,  வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் யாரையும் கைது செய்யப்படவில்லை. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில், உழவர் நிதி உதவி திட்டத்தில், மோசடியில் ஈடுபட்ட 550 போலி பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : computer center owner ,Salem , Another computer center owner arrested in Salem under farmer financial assistance scheme - CPCID, Serious Inquiry !!!
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!