×

தமிழக-கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரளாவில் நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஆலோசனை நடத்த திட்டம்!!!

திருவனந்தபுரம்:  தமிழகம் மற்றும் கேரளா இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக 2வது பேச்சுவார்த்தை கேரளாவில் நாளை நடைபெற உள்ளது. தமிழகம்-கேரளா இடையே, காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு, நெய்யாறு, பாண்டியாறு உள்ளிட்ட பல்வேறு அணைகள் அடங்கிய நீர் பங்கீடு பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன. இதனால் தற்போது நதி நீர் பங்கீடு தொடர்பாக 2வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில், ஒரு குழு கேரளா சென்றுள்ளது. நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, ஆனைமலையாறு-நல்லாறு அணை திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் குறித்தும் கோவை மாவட்ட குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழகம்-கேரளா இடையே நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கேரளா சென்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை தலைவர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த குழுவின் முதல் கூட்டத்தின்போது, பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags : river water sharing ,talks ,Kerala ,Phase ,consultations ,Tamil Nadu ,committee , Phase 2 talks in Kerala tomorrow on river water sharing between Tamil Nadu and Kerala: Plan to hold a committee headed by officials to hold consultations !!!
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...