×

நீட் தேர்வால் தற்கொலை.. அரியலூர் மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு இழப்பீட்டை ரூ. 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் : தொல் திருமாவளவன்!!

அரியலூர் : நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அரியலூர் மாவட்டம் எழந்தக்குழியைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ் நேற்று (09.09.2020) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று (10.09.2020) ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மதியம் 12 மணிக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் விக்னேஷ்க்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் மருத்துவக் கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது.மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவிற்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுக்கிற வேண்டுகோள். இந்த ஆண்டுக்கு மட்டும் வேண்டாம் என்று இல்லை இனி எப்போதும் வேண்டாம் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை.அனிதாவை தொடர்ந்து பல மாணவச் செல்வங்களை இழக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார் இந்த நிலை தொடர்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட அதை தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டில் தமிழகம் உள்ளதாக மாண்புமிகு முதல்வர் அவர்களே கூறியிருக்கிறார்.ஏழு மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு கொடுத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அவ்வாறு வழக்கு தொடுக்காதது ஏன்? கடுமையாக இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய சாவுகள் தொடர்வதைத் தடுக்க வேண்டும்.

விக்னேஷ் உயிர் இழப்பால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு துக்கத்தில், துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை தமிழக அரசும் சரி, மத்திய அரசு சரி புரிந்து கொள்ள வேண்டும்.நீட் தேர்வு இல்லை என்றால் விக்னேஷ் எப்பொழுதோ தனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவர் கல்வி பெற்று இருப்பார். அவர் மருத்துவம் படிக்க இயலாமைக்கு நீட் தேர்வு தான் காரணம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.விக்னேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.தமிழக அரசு விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க உறுதி அளித்து இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இழப்பீடு போதாது.தமிழக அரசு ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு அல்லது உயிரிழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை. விக்னேஷ் குடும்பத்திற்கும் இந்த இழப்பீடு போதாது. எனவே, இதனை 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மாணவச் செல்வங்களுக்கு நான் விடுகிற வேண்டுகோள், மருத்துவராக வேண்டும் என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். மருத்துவரானால் தான் வாழ்க்கையில் பெரிய கௌரவம் என்றெல்லாம் கருத வேண்டிய அவசியமில்லை. தன்னம்பிக்கை வேண்டும் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று முதலில் மாணவ செல்வங்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழக அரசு இதில் துணிவாக முடிவு எடுக்க வேண்டும், இதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாக அறிவிப்பதில் தமிழக அரசுக்கு தயக்கம் தேவையில்லை.மத்திய அரசு நம்மீது திணிக்கிற அனைத்தையும் நெருக்கடிக்கு இடையிலே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் பின்வாங்காமல் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டார்.

Tags : Vignesh ,Ariyalur ,Dol Thirumavalavan , Suicide by NEET exam .. Compensation for Ariyalur student Vignesh's family Rs. 50 lakhs should be raised: Dol Thirumavalavan !!
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்