தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களை திறக்க வேண்டும்: அரசுக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை!!!

குமரி:  கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இதனிடையே அனைத்து சுற்றுலாத்தலங்களையும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மக்களாக தெரிந்த தமிழ்நாட்டு சுற்றுலாத்தலங்கள் கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. மேலும் கொரோனா தொற்று காரணமாக வெறிசோடி காணப்பட்ட சுற்றுலாத்தலங்களில் தற்போது சிலர் வந்து செல்வதால் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை கன்னியாகுமரிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதய காட்சியை கண்டு ரசித்தனர். இதற்கிடையில் குமரியில் பிற மாவட்ட பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இன்னும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. என்றாலும், பிற மாவட்ட மக்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நீலகிரியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகளவு பூங்காக்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தே காணப்படுகிறது.

அதாவது நீலகிரியில், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்டவை தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வருமானமின்றி தவித்து வரும் புகைப்பட கலைஞர்கள், பயணிகளின் வருகை குறைவால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட வேண்டும் என்று விடுதி மற்றும் உணவக உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று நீலகிரி மலை ரயிலையும் விரைவில் இயக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் திறக்க அனுமதி அளிக்குமாறு வியாபாரிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு திறக்கும் பட்சத்திலேயே தங்களுக்கு வருமானம் கிடைக்குமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More