×

பெய்ரூட்டில் மீண்டும் புகை கிளம்புகிறது : ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த விபத்து போன்று ஏற்படலாம் என அச்சம்...செய்வதறியாது திகைக்கும் மக்கள்!!!

லெபனான்:  லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கட்டிட இடிபாடுகளிலிருந்து தொடர்ந்து 3வது நாளாக புகை கிளம்புவதால், மீண்டும் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி மிக பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. தற்போது அதற்கு அருகாமையில் கட்டிட இடிபாடுகளிலிருந்து புகை கிளம்பிய வண்ணம் உள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி புகை வெளியேறுவதால், மீண்டும் ஒரு வெடி விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் லெபனா நாட்டு மக்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி பெய்ரூட் நகரில் ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் என்ற வெடி மருந்து வெடித்தது.

உலகையே உலுக்கிய இந்த விபத்தில், 190 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6500 பேர் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து,  3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். பலகோடி ரூபாய் மதிப்பிற்கு பெரிதளவு பொருட்சேதமும் ஏற்பட்டது. மேலும் இதனைத்தொடர்ந்து லெபனானில் பல்வேறு போராட்டங்களும் வெடித்தன. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டு வந்தனர். இந்த நிலையில், மீண்டும் அதுபோன்ற விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் உறைந்துள்ளனர். இதற்கிடையில் புகை கிளம்பும் இடத்தில், வெடிமருந்து இருப்பு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் தற்போதே அதனை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Beirut ,accident , Beirut, smoke, August, accident, fear, people
× RELATED சாலையோர குப்பைகளுக்கு தீ புகை மண்டலத்தால் விபத்து அச்சம்