×

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்கள் கடனை மிரட்டி வசூலிக்கும் நிறுவனங்கள்

ஊட்டி:  கொரோனா ஊரடங்கு காரணமாக நீலகிரியில் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், கடன் தொகையை திரும்ப கட்டுமாறு மிரட்டி  வசூலிக்கும் பணியில் சிறு நிதி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக தேயிைல மற்றும் சுற்றுலா விளங்கி வருகிறது. மற்ற மாவட்டங்களை போல்  ேவலைவாய்ப்பை உருவாக்கும் கட்டமைப்புகள் நீலகிரியில் இல்லை.தேயிலை, காய்கறி விவசாயம் மற்றும் சுற்றுலா தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர். இவற்றில் கிடைக்கும் சொற்ப கூலியை வைத்து ஏழைகள்  அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். காய்கறி தோட்டங்களுக்கும், கட்டுமான வேலைகளுக்கும் கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் கிடைக்கும் வருவாயை மது அருந்த செலவிட்டு  விடுகின்றனர். இதனால் பெரும்பாலான ஏழை குடும்பங்களில் பெண்களே கூலி வேலைக்குச் சென்று மொத்த குடும்ப பாரத்தையும் சுமக்கின்றனர். அதிக லாபம்  சம்பாதிக்கும் நோக்கில் ஏழை மக்களை குறி வைத்து நீலகிரி மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்  முளைத்துள்ளன.

இந்த நிறுவனங்கள் கிராமம் கிராமாக சென்று மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களை இணைத்து அவர்களின்  வீடுகளுக்கே சென்று உதவுவதாகக் கூறி கடன் வழங்குகின்றனர்.கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டே கடன் வழங்குகின்றன. ஆனால் இருக்கும் இடங்களுக்கே வந்து  கடன் வழங்கும் மைக்ேரா பைனான்ஸ் நிறுவனங்களை நம்பி ஏழை மக்கள் ஏமார்ந்து வருகின்றனர். முதலில் கடன் வழங்கும்போது நல்ல முறையில் பேசும் அவர்கள், கடனை திரும்ப வசூலிக்கும்போது மிரட்டுகின்றனர். மைக்ரோ பைனான்ஸ்  நிறுவனங்களால் நீலகிரியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும்  நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலைகளுக்கு செல்ல முடியாமல் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள். இதனால்  போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் மைக்ரோ பைனான்ஸ்சில் வாங்கிய கடன் தவணையை பொதுமக்களால் கட்ட முடியவில்லை.

தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மைக்ரோ பைனான்ஸ் கடன் வசூல் செய்பவர்கள் தினமும் கடன் வாங்கியவர்களின்  வீடுகளுக்கு வந்து கடனை திரும்ப கட்டியே தீர வேண்டும் என கெடுபிடி காட்டி வருகின்றனர். கால அவகாசம் கொடுங்கள் என கேட்டால், அதையெல்லாம் ஏற்க மறுக்கும் அவர்கள் தகாத வார்த்தைகளை பேசுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.  இதன் காரணமாக கடனை கட்ட கால அவகாசம் பெற்று தர கோரி பலரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நாள்தோறும் மனு அளிப்பதை காண  முடிகிறது.ஊரடங்கு போன்ற நெருக்கடியாக கால கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வர கூடிய நிலையில் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன்  கூறுகையில், ‘‘தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் உள்ள நீலகிரி மாவட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் பெயரில் பல  மோசடிகள் நடைபெறுகிறது.

படிப்பறிவு இல்லாத ஏழை உழைக்கும் பெண்களை குறிவைத்து மகளிர் குழு என்ற பெயரில் நுண் கடன் வழங்கப்படுகிறது. வட்டி, அணுகுமுறை  போன்றவை கந்துவட்டியைவிட மோசமாக உள்ளது. மலை கிராமங்களுக்கு சென்று ஆசை வார்த்தைகள் கூறி கடன் வழங்குகின்றனர். எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால் ஒரு கடனை கட்ட, மற்றொரு கடன் வாங்கி மீள முடியாமல் நிம்மதியை தொலைக்கின்றனர். கொரோனா  ஊரடங்கு காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், கடன்களை உடனடியாக கட்ட சொல்லி வற்புறுத்துவதால் பல பெண்கள் மன  உளைச்சலிலும் விரக்தியிலும் தவிக்கின்றனர், என்றார்.

Tags : Companies ,curfew ,corona curfew companies ,Corona , During ,corona , Companies ,extort , poor ,people,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...