×

ஊரடங்கு தளர்த்தப்பட்டும் கமுதியிலிருந்து கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லை: பொதுமக்கள் கடும் அவதி

கமுதி:  கமுதியில் இருந்து கிராம பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்காததால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்தும்,  கமுதியில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள் முற்றிலும் இயங்காத நேரத்தில், கிராமப்புற பகுதிகளுக்கு  செல்லும் அரசு பேருந்துகளும் இயங்காமல் உள்ளன. கமுதியை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால், விவசாய  பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் தேவையான பொருள்களை வாங்குவதற்கு கமுதிக்கு வரவேண்டும்.  பேருந்துகள் இயங்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்த போதும் கிராம பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்காததால், விவசாயிகள் விவசாயத்திற்கு  தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ  போன்றவற்றில் விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு ரூ.500 வரை செலவாகிறது என்று வருத்தத்துடன் கூறுகின்றனர்.

மேலும் கிராமங்களில் இருந்து தாலுகா மற்றும் யூனியன் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வங்கி சம்பந்தப்பட்ட வேலையாக, மற்ற  பணிகளுக்கு தினமும் கமுதி வருவது அவசியமாகிறது. வருவதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.100 செலவாகிறது என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். இருசக்கர வாகனங்கள் சிலர் மட்டும் வைத்திருக்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் கிராம சாலைகள் மோசமாக உள்ள நிலையில், இருசக்கர  வாகனங்களில் பயணம் செய்பவர்கள் விபத்திற்குள்ளாக நேரிடும். மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக, அதிகமாக பணம் செலவழித்து கமுதி வந்து செல்கின்றனர். எனவே கிராம மக்களின் நலன் கருதி டவுன் பஸ்களை இயக்க  வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : bus facilities ,Kamuti ,suffering ,villages , Lack ,adequate ,bus ,Kamuti ,villages,suffering
× RELATED விலைவாசி உயர்வால் மக்கள் அவதி: பிரியங்கா தாக்கு