×

நடுத்தர குடும்பங்களுக்கு தலைவலியாகும் புதிய பிரச்னை கொரோனாவை காரணம் காட்டி வீட்டை காலி செய்யச் சொல்லும் உரிமையாளர்கள்: அரசு எச்சரிக்கை விடுக்க கோரிக்கை

சேலம்:  தமிழகத்தில் கொரோனா  தொற்றை காரணம் காட்டி, வாடகை வீட்டில் இருப்பவர்களை வெளியேறச் சொல்லும் அவலம் நடுத்தர  குடும்பங்களுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது.  தமிழகத்தில்  கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், கடந்த 1ம் தேதியில் இருந்து மாவட்டம் விட்டு, மாவட்டம்  செல்வதற்கான போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ்  பரவல் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவ்வாறு  ேவலையிழந்தவர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, வீட்டு  உரிமையாளர்கள் அவர்களை வெளியேறச் சொல்வது புதிய தலைவலியாக மாறி உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற சர்ச்சைகள் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. வாடகைக்கு குடியிருப்போரின் வீடுகளுக்கு அருகிலேயே,  அவற்றின் உரிமையாளர்களும் வசித்து வருகின்றனர். வாடகைதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், மொத்த  குடும்பத்திற்கும் சோதனை செய்து, தனிமைப்படுத்த அறிவுறுத்துகின்றனர். ஏற்கனவே பல மாதங்களாக வாடகை பாக்கி நிலுவையில் இருப்பதால்,  இந்த சூழலை உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். உங்களால் எங்களுக்கும் பாதிப்பு வந்து விடும் போல் உள்ளது.  எனவே, வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறுவது நடுத்தர குடும்பங்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. இது குறித்து வாடகை வீட்டில் வசிப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 48.44 சதவீதம் நகரப்பகுதிகளாக உள்ளது. இதில் 23.4 சதவீதம் பேர் இன்னும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். கடந்த 30  ஆண்டுகளுக்கு முன்பு வாடகை என்றால் ஓட்டு வீட்டுக்கு 300 முதல் 500 வரையும், மாடிவீடு என்றால் 1000 முதல் 1500வரையும் இருந்தது.  ஆனால் 2010ம் ஆண்டுக்கு பிறகு, வீட்டின் வாடகை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஓட்டு வீடு என்றால் 2500 முதல் 5 ஆயிரம் வரையிலும், மாடி  வீடு என்றால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும் வாடகை வசூலிக்கப்படுகிறது.

வாடகை உயர்ந்தது போல், தனிமனித வருமானம்  உயரவில்லை. இதனால் வாடகை வீட்டில் வசிப்போரின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக,  பல்வேறு நிறுவனங்கள் இன்னும் செயல்படாமல் உள்ளன. இதனால் கடந்த 4 மாதமாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள், சரிவர வாடகை செலுத்த  முடியாமல் உள்ளனர். இவ்வாறு வாடகை கொடுக்க முடியாத வாடகைதாரர்களை, வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர்.
இதற்கு கொரோனா தொற்று பாதிப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்கு 3மாத வாடகை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.  எப்படியாவது அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

இக்கட்டான இந்த காலகட்டத்தில் இது போன்ற  செயல்கள் நிச்சயம் மனிதாபிமானம் அற்றது. திடீரென்று விரட்டினால் அவர்கள் எங்கே போய் நிற்பார்கள்? மனதில் எந்த அளவுக்கு உளைச்சல்  ஏற்படும் என்பதை, சில வீட்டு உரிமையாளர்கள் உணர்வதில்லை. இதை யாரும் ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை. புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இது தற்போது  ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே, இந்த  அவலத்தை போக்க அரசு, உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். குறிப்பாக வீட்டு உரிமையாளர்கள், இது  போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை ஒரு பொது எச்சரிக்கையாக  வெளியிட  வேண்டும்.இவ்வாறு சங்க நிர்வாகிகள் கூறினர்.


Tags : families ,Owners ,Government ,house ,house Owners ,Corona , problem , headache , middle-class, Government ,warns ,request
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...