×

மணவாளக்குறிச்சி அருகே 1000 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது: இழப்பீடு வழங்க பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

குளச்சல்: குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கட்டுமர  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக மீன் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல்  குமரி மாவட்டம் முழுவதும்  மீண்டும் மழை பெய்து வருகிறது. மணவாளக்குறிச்சி அருகே பெரியகுளம் ஏலா சுமார் 1000 ஏக்கர் பரப்பு கொண்டது.  இதில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். தற்போது இந்த ஏலாவில் நெற் பயிர் விளைந்து அறுவடை செய்ய விவசாயிகள்  தயாராகி வந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது.

நேற்று மதியம் வரை மழை நீடித்தது. இதில் பெரியகுளம் ஏலா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ய  முடியாமல் விவசாயிகள் பெருமளவில் வருவாய் இழந்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் பெரியகுளம் ஏலா  சென்று நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:      தொடர் மழையால் பெரியகுளம் ஏலாவில்  நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் வாங்கி விவசாயிகள் உரம், நீர் பாய்ச்சல், களை பறித்தல் போன்ற  வேலைகளை செய்துள்ளனர். நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நேரத்தில் மழை நீரில் மூழ்கியதால்  விவசாய செலவுக்கு கூட   நெற்பயிர்கள்  கிடைக்காதது பெரும் ஏமாற்றமாக உள்ளது. இந்த ஏலா விவசாயிகள் கிசான் திட்டத்தில் உதவி பெறாதவர்கள்.

எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இது சம்பந்தமாக நாளை (இன்று) மாவட்ட கலெக்டரை சந்தித்து  விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க முறையிடுவேன். 14ம் தேதி நடக்கும் சட்டசபை கூட்டத்திலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து  விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

Tags : paddy fields ,Prince MLA ,Manawalakurichi , 1000 acres ,paddy, fields ,Manawalakurichi , MLA,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை