×

ரஃபேலை வைத்துள்ள 4-வது நாடாக மாறியது இந்தியா: சர்வ மத பூஜையுடன் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைப்பு.!!!!

டெல்லி: பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டது. பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி செலவில் 36 அதிநவீன  ரஃபேல் போர் விமானங்களை வாங்க, 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், முதல் விமானம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் அரசு கடந்த ஆண்டு ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து முதல்  கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சின் போர்டியக்ஸ் நகரில் உள்ள மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி இந்தியா வந்தடைந்தன.

இந்த நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 ரஃபேல் போர் விமானங்கள் சர்வ மத பூஜைகளுடன் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை  அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ரஃபேலின் வருகை மூலம் இந்திய விமானப்படையின் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ரஃபேலை வைத்துள்ள 4வது நாடாக இந்தியா மாறி உள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து  வாலாட்டிக் கொண்டிருப்பதால் விரைவில் ரஃபேல் விமானங்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Tags : country ,India ,RAF ,Raphael ,Indian Air Force ,Air Force. , India becomes 4th country to have Rafale: 5 Rafale fighter jets officially join Indian Air Force. !!!!
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!