×

மகாராஷ்டிராவில் மராட்டியர் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மராட்டியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையில் மராட்டியர்கள் 30 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2018ல் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி எல்.என்.ராவ் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மராட்டியர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர். தற்போது வரை மராட்டியர் இடஒதுக்கீடு சட்டத்தின் கீழ் பலனடைந்தவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூனில் மும்பை உயர் நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த போதிலும், இடஒதுக்கீடானது வேலைவாய்ப்பில் 12 சதவீதத்திற்கும் கல்வியில் 13 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டுமென கூறியது.

Tags : Maharashtra ,Maratha ,Supreme Court , Maharashtra, Maratha Reservation, Supreme Court, Prohibition
× RELATED சரத் பவார் படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்த தடை..!!