பெரிய உணவகங்கள், ஓட்டல்களை போல் கையேந்தி பவன்களுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதி: பிரதமர் மோடி அறிவிப்பு

போபால்: பெரிய ரெஸ்டாரண்ட்கள், ஓட்டல்களை போல், சாலையோரங்களில் நடத்தப்படும் உணவு கடைகளுக்கும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்வதற்கான வசதியை அளிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக கடந்த ஜூன் 1ம் தேதி பிரதமரின் ‘சுவநிதி திட்டம்’ தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 4.5 லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இத்திட்டதின் மூலம் ஒரு லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

அவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று பேசினார். பின்னர், அவர்களிடையே மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: சுவநிதி திட்டத்தில் இணைந்த உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளது மிகப்பெரிய விஷயமாகும். மற்ற மாநிலங்களும் மத்திய பிரதேசத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தகட்டமாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலையோர வியாபாரிகளுக்கும் ஓர் ஆன்லைன் தளத்தை உருவாக்கி தரும் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் பெரிய ரெஸ்ட்ராண்ட்களைப் போல், தெருவோர வியாபாரிகளும் தங்கள் உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்யலாம். இதற்கு வியாபாரிகள் முன்வந்தால், திட்டத்தை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. சாலையோர வியாபாரிகளும் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பிற்குள் வர வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனையானது கடந்த 3-4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதன் அவசியம், கொரோனா காலத்தில் நன்றாகவே அறியப்பட்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு பதில், மொபைல் போன் மூலமாக பணம் செலுத்துகின்றனர். எனவே, சாலையோர வியாபாரிகளும் ஆன்லைன் அமைப்பிற்குள் வர வேண்டும்.

வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வழங்குபவர்களால் ஓர் புதிய தொடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கி உள்ளிட்ட பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் உங்களை தேடி வருவார்கள். பரிவர்த்தனை செய்ய உங்களுக்கென பிரத்யேக க்யூஆர் கோடு தரப்படும். அதன் மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இணைந்து உலகிற்கே ஓர் எடுத்துக்காட்டாக நீங்கள் இருக்க முடியும். சுவநிதி திட்டத்தின் கீழ், தனியார் கடன் வழங்குபவர்களிடம் இருந்து அதிக வட்டிக்கு ஏழை வியாபாரிகள் கடன் வாங்கி நெருக்கடிக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அதை சரியாக செலுத்தினால், அடுத்தகட்டமாக அதிக வசதிகளை பெறலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால், அதற்கான வெகுமதிகள் கிடைக்கும். அடுத்த முறை, அதிகமான கடனும் வழங்கப்படும். இதுவரை நாட்டில் பலரும் ஏழ்மையை பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், கடந்த 6 ஆண்டில்தான் ஏழ்மையை ஒழிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஜன்தன் யோஜனா மூலம் 40 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் வங்கி கடன் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நேரடி பலனை பெறுகின்றனர். விரைவில் கிராமங்களும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளத்தில் கொண்டு வரப்பட உள்ளன. அடுத்த 1000 நாட்ளில் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி செய்யப்பட உள்ளது.

மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அட்டை வழங்கப்பட உள்ளது. அனைத்து டிஜிட்டல் மயமாகும் போது, சாலையோர வியாபாரிகளும் இந்த அமைப்புகள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம்; மண்பானை தண்ணீர் குடியுங்கள்

சுவநிதி திட்ட பயனாளியான இந்தூர் சன்வீரை சேர்ந்த சாகன்லால் மற்றும் அவரது மனைவியுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் உரையாடினார். அப்போது சாகன்லால் தன் அருகே பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்ததை கவனித்த பிரதமர் மோடி, ‘‘பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக மண்பானை தண்ணீரை குடியுங்கள். இதனால், உடல் நலத்திற்கு நல்லது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்,’’ என அறிவுரை கூறினார்.

துடைப்ப வியாபாரிக்கு மோடி கொடுத்த ஐடியா

நிகழ்ச்சியில் துடைப்பம் தயாரிக்கும் தொழில் செய்யும் சாகன்லாலிடம் மோடி பேசுகையில்,  ‘‘துடைப்பத்தில் பயன்படுத்திய பைப்பை திருப்பி தருமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அதன் மூலம், துடைப்பம் தயாரிக்கும் செலவு குறையும்’,’ என்று யோசனை தெரிவித்தார்.

Related Stories:

>