×

உதவிக்காக அழைத்தது விபரீதத்தில் முடிந்தது: மனநலம் பாதித்த சிறுவனை சரமாரியாக சுட்ட போலீஸ்

* உடல் முழுவதும் குண்டு பாய்ந்து உயிர் ஊசல்
* மருத்துவமனையில் சேர்க்கவே அழைத்தேன் - தாய்

வாஷிங்டன்: அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் நகரில், கோல்டா பார்ட்டன் என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 13 வயது மகன் லிண்டன் கேமரூனுடன் வசித்து வந்தார். இச்சிறுவனுக்கு ஆட்டிசம் நோயும் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவனுடைய மனநலம் சிறிது அதிகமாக பாதிக்கப்பட்டதால் அதிகமாக சத்தம் போட்டு தாயிடம் கலாட்டா செய்தான். இதனால், அவனை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 911 என்ற அவசர எண்ணை அழைத்து போலீசின் உதவியை நாடினார் பார்ட்டன். அவருடைய வீட்டிற்கு வந்த போலீசார், அவரை வெளியே நிற்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில், கேமரூனை தரையில் படுக்கும்படி போலீசார் கூறியது கேட்டது. அதன் பிறகு, துப்பாக்கியால் சுடும் சத்தம் மட்டுமே கேட்டது. பின்னர், ரத்த காயங்களுடன் அவன் கொண்டு செல்லப்பட்டான். அவனது உடலின் பல இடங்களில் குண்டு துளைத்து  ரத்தம் பீறிட்டது. இதை  பார்த்து பார்ட்டன் பதறினார்.  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த வேதனை பேட்டி வருமாறு: கேமரூன் ஒரு குழந்தை. அவனுக்கு மனநல பிரச்னை இருந்தது. அவனை கூட போலீசாரால் சமாளிக்க முடியவில்லையா? ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு, அன்றுதான் நான் வேலைக்கு சென்றேன். அதனால், அவன் மிகவும் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறான்.

வீடு திரும்பிய போது மிகவும் கூச்சலிட்டு களேபரம் செய்தான். அதனால். அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசாரின் உதவியை நாடினேன். அவர்கள் வந்தால் நிலைமை சரியாகும், பதற்றம் குறையும் என்று நினைத்தேன். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் போலீசாரை அனுப்பாமல் வேறு பிரிவை சேர்ந்தவர்களை அனுப்பி விட்டனர். சிறிது மனநலம் பாதித்துள்ளதால் கத்துகிறான். கவனமாக கையாளுங்கள் என்று போலீசாரிடம்  கூறினேன். ஆனால், அவர்களுக்கு அவனை கையாளத் தெரியவில்லை. சுட்டு விட்டனர். ஏன் அவனை சுட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘ஆயுதம் வைத்திருப்பதாக நினைத்து சுட்டு விட்டோம்’
போலீசார் கூறுகையில், ‘‘சிறுவன் அங்கும் இங்குமாக கத்திக் கொண்டே ஓடியதால், அவன் கையில் ஏதாவது ஆயுதம் இருக்கக் கூடும் என்று நினைத்து போலீசார் சுட்டு விட்டனர். அதன் பிறகு பார்த்தபோது அவனிடம் ஆயுதம் எதுவுமில்லை என்று தெரிய வந்தது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும். தற்போது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், என்றனர்.

Tags : Mentally ill boy, shot by police
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...