×

ஆந்திராவில் இருந்து விவசாயிகளுக்காக கிசான் ரயில் சேவை தொடக்கம்: தென்னிந்தியாவில் முதல்முறை

அமராவதி: விவசாயிகளுக்கான கிசான் ரயில் சேவை தென்னிந்தியாவிலும் தொடங்கியுள்ளது. விவசாய விளைபொருட்களை குளிர்சாதன வசதியுடன் எடுத்துச் செல்ல கிசான் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் கிசான் ரயில், மகாராஷ்டிராவில் இருந்து பீகாருக்கு வாராந்திர சேவையாகத் தொடங்கியது. விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் காய்கறிகள் வரத்து காரணமாக வாரமிரு சேவையாகத் தற்போது இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவில் இருந்து டெல்லிக்கு கிசான் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

காணொலி காட்சி வாயிலாக நடந்த இதன் தொடக்க நிகழ்வில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் தொடங்கி வைத்தனர். விழாவில் பேசிய தோமர், ‘‘ஆந்திராவின் அனந்தபுரமு மாவட்டத்தில் 2 லட்சம் ஹெக்டேருக்கும் மேலாக காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இவற்றுக்கு வட இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. கிசான் ரயில் சேவை மூலம் ஆந்திர வேளாண் உற்பத்தி பாதுகாக்கப்பட்டு இருப்பதுடன், உரிய லாபம் சம்பாதிக்கவும் வழி வகுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், எல்லா மாநிலங்களுக்கும் கிசான் ரயில் சேவை படிப்படியாக அமல்படுத்தப்படும். அத்துடன், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கிசான் உடான் என்கிற விமான சேவைத் திட்டமும் விரைவில் தொடங்கும்.’’ என்று கூறியுள்ளார்.

Tags : Andhra Pradesh ,South India , Andhra, farmer, Kisan train service, start
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி