×

ரொனால்டோ 100

ஸ்டாக்ஹோம்: நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்வீடனுடன் மோதிய போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் போட்டு அசத்தினார். போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச போட்டிகளில் தனது 100வது மற்றும் 101வது கோல்களை அடுத்தடுத்து பதிவு செய்த ரோனால்டோ, ரசிகர்கள் முன்பாக இந்த சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ரசிகர்கள் இல்லாத ஸ்டேடியங்களில் கால்பந்து விளையாடுவது என்பது கோமாளி இல்லாத சர்க்கஸ், மலர்கள் இல்லாத தோட்டம் போன்றது.

விளையாட்டு வீரர்களாக இதை நாங்கள் விரும்புவதில்லை. ஆனாலும், இது எனக்கு பழகிவிட்டது. இதற்காகவே ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் எதிரணி ரசிகர்களைக் கூட நான் மிகவும் மிஸ் செய்கிறேன். எனக்கு எதிராக அவர்கள் கூச்சலிடும்போது தான் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகமே பிறக்கும். அதே சமயம் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உடல்நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலை திரும்பி, திரளான ரசிகர்களுக்கு முன்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்.

இவ்வாறு ரொனால்டோ கூறினார். தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரானின் அலி டேய் (109 கோல்) முதலிடம் வகிக்கிறார். ரொனால்டோ 2வது இடத்தில் உள்ளார். பிரேசில் முன்னாள் நட்சத்திரம் பீலே (77 கோல்) 7வது இடத்திலும், இந்தியாவின் சுனில் செட்ரி (72 கோல்) 10வது இடத்திலும் உள்ளனர். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி டாப் 10ல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ronaldo 100 , Ronaldo 100
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...