×

எதிர்ப்பு வெற்று கோஷம்தானா?.. லடாக் மோதல் நிகழ்ந்த பிறகும் சீன வர்த்தகத்துக்கு பாதிப்பு இல்லை

* சீனாவுக்கு ஏற்றுமதி அபாரமாக உயர்வு
* புறக்கணிப்பு இல்லை என்பது அம்பலம்

சென்னை: கொரோனாவால் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் கடும் பாதிப்பை அடைந்தது. இறக்குமதி குறைந்ததால் வர்த்தக பற்றாக்குறையும் குறைந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது.  கடந்த ஜூலையில் ஒட்டு மொத்த அளவில் நாட்டின் ஏற்றுமதி 9.9 சதவீதம் சரிந்தது. ஆனால், சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதி 23.7 சதவீதம் அதிகரித்து, 174 கோடி டாலராக உள்ளது. இதுபோல், நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதி 29.6 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், சீனாவில் இருந்து 9.8 சதவீதம் மட்டுமே சரிந்து, 558 கோடி டாலராக இருந்தது என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி 30 சதவீதம் சரிந்துள்ளது.

ஆனால், சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேகாலக்கட்டத்தில் இறக்குமதி ஒட்டு மொத்த அளவில் 47.9 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், சீனாவில் இருந்து இறக்குமதி 29.2 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம்தேதி நடந்த மோதலுக்கு பிறகு, சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதோடு, சீனாவுக்கு எதிராக வரத்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக டிக்டாக் உட்பட சீன ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டன. தவிர, 5ஜி நெட்வொர்க் செயல்படுத்த சீன நிறுவனங்களான வாவே, இசட்டிஇ நிறுவன கருவிகள் வாங்குவதற்கும் தடை விதித்தது.

அதோடு, அரசு நிறுவனங்கள் சீன பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் தடை போட்டது. எனவே, சாலை, மின் உற்பத்தி உட்பட இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களில் பங்கேற்பது சீன நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீன எல்லையில் நடந்த தாக்குதலால், அந்நாட்டுடனான வர்த்தகத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, ஒட்டு மொத்த அளவில் ஏற்றுமதி குறைந்தபோதும், சீனாவுக்கு ஏற்றுமதி அபாரமாக அதிகரித்துள்ளது. இதுபோல், ஒட்டு மொத்த அளவில் இறக்குமதி சரிந்தும், சீனாவில் இருந்து இறக்குமதி பெரிய அளவில் சரியவில்லை.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தாக்குதலில் இருந்து இன்னும் விடுபடவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், சீனாவில் இயல்புநிலை திரும்பி விட்டது. இதுவே இந்நாட்டுடனான வர்த்தகம் மேம்பட முக்கிய காரணம் என வர்த்தகர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இரும்பு தாது, தாமிரம் ஏற்றுமதி அபாரம்
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 153.5 கோடி டாலர் மதிப்பிலான இரும்பு மற்றும் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரும்பு தாது ஏற்றுமதி 82 சதவீதம் அதிகரித்து 134.4 கோடி டாலராகவும், பிளாஸ்டிக் 93 சதவீதம் உயர்ந்து 57.7 கோடி டாலராகவும், தாமிரம் 789 சதவீதம் உயர்ந்து 24.5 கோடி டாலராகவும் உள்ளது.

Tags : protest ,Chinese ,conflict ,Ladakh , Opposition, Ladakh conflict, Chinese trade, no impact
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...