×

விவசாயிகளே பதிவு செய்யலாம் என அறிவித்ததால் கிசான் திட்ட மோசடிக்கு மத்திய அரசே காரணம்: முதல்வர் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தமிழகத்தில் ரூ.120 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இது குறித்து திருவண்ணாமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், விவசாயிகளே ஆதார் அட்டை வைத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததால்தான் தவறு நடந்துள்ளது என்று தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ134 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ரூ54 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதோடு, ₹19.20 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதை வழங்கி வருகிறோம். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது தொடர்பாக, விரிவான விளக்கங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்திருக்கிறார். திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலை இன்னும் வரவில்லை. அப்படி வந்தால், அரசு பரிசீலிக்கும். மாநிலங்களுக்கு இடையேயான நதிகளின் நீரை தடுத்தால், வழக்கு ெதாடரப்படும்.

தமிழக அரசு எப்போதும் உரிமையை விட்டுக்கொடுக்காது. பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை மாநில அரசுதான் கண்டுபிடித்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. 13 மாவட்டங்களில் இந்த பிரச்னை உள்ளது. விவசாயிகளே ஆதார் அட்டை, குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், இந்த தவறுகள் நடந்துள்ளது. இத்திட்டத்தில, ஏற்கனவே 41 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த நான்கு மாதங்களில் 46 லட்சமாக உயர்ந்தது. எனவே, துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டுபிடித்தனர். அதில் சுமார் 5 லட்சம் பேர் தகுதியில்லாதவர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து பணம் திரும்பபெறப்பட்டு வருகிறது. இதில், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 81 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. எனவே, அவர்கள் எண்ணப்படி பள்ளிகள் திறப்பது குறித்து அரசு செயல்படும். தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் ₹38 கோடியில், திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கபபடும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் விழுப்புரத் தில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டார்.

எட்டுவழிச்சாலை அவசியம்
முதல்வர் எடப்பாடி பேட்டியில், எட்டு வழிச்சாலை திட்டம் மத்திய அரசினுடையது. நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. வாகன போக்குவரத்து 305 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எனவே, சாலையை விரிவுபடுத்துவது அவசியம். தொழிற்சாலைகள் அதிகம் வருவதற்கு உட்கட்டமைப்பு வசதி சிறப்பாக இருக்க வேண்டும். சேலத்துக்கு மட்டும் இந்த சாலையில்லை. திருவண்ணாமலை மாவட்டமும் பயன்பெறுகிறது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி 794 கிமீ தொலைவு ஏற்கனவே நடந்தது. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. இப்போதுதான் பாதிக்கப்படுவதாக சொல்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்ததீர்ப்பு அடிப்படையில் மத்திய அரசு செயல்படும்” என்றார்.

Tags : government ,Chief Minister ,Edappadi ,Govt ,CM , Farmer, Kisan Project Fraud, Central Government, Chief Minister Edappadi
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...