×

அரியலூர் அருகே பரிதாபம் நீட் தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை

அரியலூர்: அரியலூர் அருகே நீட் தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு விக்னேஷ்(19), வினோத்(16) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் விக்னேஷ் பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண் மற்றும் 2017-18-ம் ஆண்டு பிளஸ்2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்றுள்ளார். டாக்டராக வேண்டும் என்பதே விக்‌னேஷ் லட்சியம் என்பதால் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு இரண்டு முறை  தேர்வு எழுதியுள்ளார்.

ஆனால், இரண்டு முறையும் குறைந்த மதிப்பெண்களே பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் வருகிற 13ம்தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும் சமீபத்தில் ஆன்லைன் மூலம் எழுதிய மாதிரி தேர்வில் 550 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மதிப்பெண்கள் போதாது என்று நண்பர்கள் கூறியதாகவும், ஏற்கனவே இரண்டு முறை தோல்வியடைந்ததால் பயத்தில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. 10 மணியாகியும் அவரை காணாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். வீட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிணற்றில் விக்னேஷ் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள், ‘நீட் தேர்வால்தான் விக்னேஷ் உயிர் பறிபோனது. உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி பேச்சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விக்னேஷின் தந்தை விஸ்வநாதன் கூறும்போது, ‘நீட் தேர்வு பயத்திலேயே எனது மகன் இருந்து வந்தான். ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியுற்றதால் மனம்வருந்தி காணப்பட்டான். அதனால்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளான்’ என தெரிவித்தார்.


Tags : Student ,suicide ,Ariyalur Student ,Ariyalur , Ariyalur, Awful, Fearing Neat Choice, Jumping In Well, Student Suicide
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை