×

முல்லைப் பெரியாறு துணைக்குழுவை கலைக்க கோரிய வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி திடீர் விலகல்: வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட துணைக் குழுவை கலைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திடீரென விலகினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் 130 ஆக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் தமிழகம், கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைக்குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவற்றை ஒன்றாக இணைந்து (பிரதான குழு), அணையின் பாதுகாப்பு, நீர் திறப்பு, நீர் கொள்ளளவு மற்றும் இயற்கை பேரிடர் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த குழு எடுக்கும் முடிவே இறுதியானது,’ என கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி உத்தரவிட்டது. அதேபோல், அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடர் திட்டத்தை வகுத்து அமல்படுத்துவதற்காக துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு அதிகாரமும் அளிக்கப்பட்டது. அதன்படியே, தற்போது வரை அணை தொடர்பான அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவை சார்ந்த ஜோசப் என்பவர் தரப்பில் இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் விதமாகதான் பிரதான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது துணைக்குழுவும் கூடுதலாக அமைக்கப்பட்டு கண்காணிப்பு குழுவுக்கான அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால், துணைக் குழுவை கலைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.ஏஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு, மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க தயாராகினர். அப்போது, திடீரென குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘முல்லைப் பெரியாறு சம்பந்தப்பட்ட வழக்கில் எனது சகோதரர் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி இருக்கிறார். அதனால், இந்த மனுவை நான் விசாரிப்பது சரியானதாக இருக்காது. எனவே, இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்,’ என அறிவித்தார். மேலும், இந்த வழக்கை நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் அமர்வு விசாரிக்கும்  என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். முல்லைப் பெரியாறு வழக்கில் இதற்கு முன் எனது சகோதரர் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி இருக்கிறார். அதனால், இந்த மனுவை நான் விசாரிப்பது சரியாக இருக்காது.

Tags : hearing ,Chief Justice ,session , Mullai Periyar, Subcommittee, Case for Dissolution, Investigator, Chief Justice, Disqualification, Other Session, Transfer Order
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...