×

ஊரடங்கை அமல்படுத்தியது ஏழைகள் மீதான பெரிய தாக்குதல்: மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘கொரோனா நோய் தொற்று காரணமாக மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு, ஏழைகள் மீதான மிகப்பெரிய தாக்குதல்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா நோய் தொற்று தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். இந்நிலையில், அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த வீடியோ ஒன்றை ராகுல் நேற்று வெளியிட்டார். அதில் அவர், “சிறிய மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள், தினசரி கூலியை சம்பாதிக்கும் ஏழைகள், நாள்தோறும் அவர்கள் என்ன வருமானம் ஈட்டுகிறார்களோ அதன் மூலமாகத் தான் தினசரி சாப்பிடுகின்றனர்.

முன்னறிவிப்பு இன்றி நீங்கள் (பிரதமர் மோடி) ஊரடங்கை அறிவித்தபோது, நீங்கள் அவர்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தினீர்கள். பிரதமர் மோடி 21 நாட்களுக்குதான் இந்த ஊரடங்கு இருக்கும் என்றார். அமைப்புசாரா துறையின் முதுகெலும்பு 21 நாட்களில் உடைந்தது. சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நீங்கள் ஒரு சலுகை தொகுப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு பரிந்துரைத்தோம். ஆனால், மத்திய அரசோ பணக்காரர்கள் 15-20 பேரின் பல லட்சம் வரிகளை தள்ளுபடி செய்தது. இந்தியாவில் மத்திய அரசு விதித்த ஊரடங்கானது, கொரோனா மீதான தாக்குதல் கிடையாது. மாறாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு கடை வியாபாரிகள் மீதான தாக்குதலாகும். அமைப்புசாரா தொழில்துறை மீதான தாக்குதலாகும், என கூறியுள்ளார்.

Tags : government ,attack ,poor ,leap ,Rahul , Curfew enforcement, poor, big attack, federal government, Rahul leap
× RELATED கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்...