×

கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் பின்னடைவு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை தோல்வி: விளக்க முடியாத பக்கவிளைவு ஏற்பட்டதால் மனிதர்களிடம் பரிசோதனை திடீர் நிறுத்தம்

நியூயார்க்: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்தால் ‘விளக்க முடியாத’ பக்க விளைவு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், இதை மனிதர்களிடம் கொடுத்து பரிசோதிப்பது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்காக, உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த மருந்தை முதலில் வெளியிடுவதற்கான போட்டியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில், இங்கிலாந்தைச் சேர்ந்த ‘அஸ்ட்ராஜெனகா’ மருந்து நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, ‘கோவி ஷீல்ட்’ என்ற பெயரில் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன. மனிதர்களிடம் கொடுக்கப்பட்டு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் வெளியானதால், இந்தியாவிலும் இதை பரிசோதிக்க, மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த தடுப்பு மருந்தால் பக்க விளைவு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி ‘அஸ்ட்ராஜெனகா’ மருந்து நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவிஷீல்ட் அளிக்கப்பட்ட நோயாளிக்கு ‘விளக்க முடியாத உடல்நலக் குறைபாடு’ ஏற்பட்டுள்ளது.

இதனால், இதன் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பக்கவிளைவு ஏற்பட்டிருப்பது தற்செயலானது. சோதனை நடக்கும்போது இதற்கான சாத்தியத்தையும் எதிர்பார்த்தோம்’ என்று கூறியிருக்கிறது. ‘விளக்க முடியாத உடல்நலக்குறைபாடு’ என்பது என்ன?’ என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ‘எதிர்பாராத உடல்நலக் குறைபாடு என்பது வலி, காய்ச்சல் என்று சாதாரணமானதாக இருந்தால் பிரச்னை இல்லை. அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அளவு தீவிரமானதாக இருந்தால் சிக்கலாகி விடும்,’ என்று வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டெப்ரோ புல்லர் கூறியுள்ளார்.

தடுப்பூசி விஷயத்தில் அவசரம் காட்டுவது தேவையற்ற அபாயங்களை உண்டாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசி பந்தயத்தில் முந்துவது யார் என்று உலகின் பல நாடுகளுக்குள் போட்டி நிலவி கொண்டிருக்கிறது. கடந்த மாதம் ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்த போதும், அதன் பாதுகாப்புத்தன்மை குறித்து மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச அளவில் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பூசி, தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

* இந்தியாவிலும் நிறுத்தப்படுமா?
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கும் உரிமையை புனேயைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ பெற்றுள்ளது. இதன்மூலம், தற்போது இந்தியாவிலும் 1,600 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு  பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை அளித்து பரிசோதிக்க சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதால், இந்தியாவிலும் மனிதர்களுக்கு இதை அளித்து நடத்தப்படும் பரிசோதனை நிறுத்தப்படுமா என கேள்வி எழுந்தது. ஆனால், பரிசோதனை தொடரும் என சீரம் அறிவித்துள்ளது.

Tags : Oxford ,testing , Attempt to eradicate corona, Oxford vaccine test, failure, side effect, man, test, stop
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு