×

கூடுதல் செலவு, போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப புறநகர் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள், பயணிகள் வலியுறுத்தல்

சென்னை: கூடுதல் செலவு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை நகர மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பும் வகையிலும் புறநகர் மின்சார ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில், மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கி உள்ளது. எனினும் தொலைதூர பயணத்துக்கு ஏற்ற வகையில் ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக தலைநகரான சென்னை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறது. காரணம் சென்னையின் இயல்பு வாழ்க்கையே மாநகர பஸ்கள் மற்றும் புறநகர ரயில்களின் சேவைகளையே சார்ந்துள்ளது. அதில் பஸ்கள் ஓடினாலும், கட்டணம் குறைவு, போக்குவரத்து நெரிச்சல் இல்லாத நிலை, குறிப்பிட்ட நேரத்தில் பணி, அலுவலகம் செல்ல 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புறநகர் ரயில் போக்குவரத்தையே நம்பி உள்ளனர். இந்த ரயில் மார்க்கத்தில் தான் ஐடி நிறுவனங்கள், தி.நகர் போன்ற வர்த்தக கேந்திரங்கள், விமான நிலையம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பொழுதுபோக்குமிடமான மெரினா கடற்கரை, குழந்தைகள் பூங்கா, ராஜீவ்காந்தி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை என்று மருத்துவமனைகளும் உள்ளன. இந்த ரயில் போக்குவரத்தை நம்பி தான் புறநகர் பகுதிகளில் நிறைய நவீன குடியிருப்புகள் உருவாகி உள்ளது.  

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 169 நாட்களாக மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் நோயாளி முதல் ஐடி நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என பலரும் கடும் சிரமத்தில் உள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தாம்பரம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, அரக்கோணம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், கும்மிபூண்டி, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து தான் தினமும் வேலைக்கு வருகின்றனர். அவர்களால் பஸ் பயணம் என்பது நினைத்து கூட பார்க்க முடியாது. பீக்ஹவர்சில் ஒரு மணி முதல் 3 மணிநேரம் வரை டிராபிக் ஜாம் ஆகும்.

ஆனால் புறநகர் ரயிலில் 30 முதல் 45 நிமிடத்தில் அவர்கள் அலுவலகம் அல்லது வீட்டுக்கு திரும்பிவிடலாம். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள் பேருந்து கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.50க்கு மேல் செலவாகிறது. எனவே புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 15ம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் மின்சார ரயில்களை இயக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘புறநகர் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வாரிய அனுமதி கிடைத்த பிறகு விரைவில் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கும்’ என்றனர். 


Tags : Chennai ,commuters ,activists , Extra cost, reduce traffic congestion, Chennai normal life, suburban electric trains, operating, social activists, travelers
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...