×

ஊரடங்கு உத்தரவு தளர்வில் மாற்றம் அனைத்து கடைகளிலும் ஏசி பயன்படுத்தலாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அனைத்து கடைகளிலும் ஏசி வசதியை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 60 சதவீதம் பேரை வாகனங்களில் அழைத்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு கால கட்டத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பஸ், ரயில் போக்குவரத்து வசதி, வழிபாட்டு தலங்களில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகள் வாகனங்களில் ஊழியர்களை அழைத்து வருவது, அலுவலகங்களில் சமூக இடைவெளியே கடைபிடிப்பது உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டுமான பணி மற்றும் தொழிற்சாலைகளுக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்படும் ஊழியர்களுக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 30 முதல் 40 சதவீதம் பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வகுப்பறைகள், உடற்பயிற்சி கூடம் மற்றும்  கடைகளில் நல்ல காற்றோட்டமாக இருக்கும் வகையில் கடைகள் திறக்கப்பட வேண்டும். ஏசி பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது அந்த உத்தரவில் மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதில், தொழிற்சாலை, கட்டுமான பணிகளுக்காக வாகனங்களில் 60 சதவீதம் வரை ஊழியர்களை அழைத்து வரலாம். வகுப்பறைகள், உடற்பயிற்சிக்கூடம், உணவகம், கடைகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி வரை ஏசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அழைத்து வருவதற்கான வாகன வசதியை அந்த நிர்வாகமே செய்து தர வேண்டும் என்கிற உத்தரவும் திரும்ப பெறப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : shops ,Government of Tamil Nadu , Curfew order, change in relaxation, all shop, AC, Government of Tamil Nadu
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ