×

அறநிலையத்துறை கமிஷனராக பிரபாகர் பொறுப்பேற்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி ஜூன் 18ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, அவரிடம் அறநிலையத்துறை கமிஷனர் பொறுப்பை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த பிரபாகரை அறநிலையத்துறை கமிஷனராக நியமனம் செய்து கடந்த 29ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர் கமிஷனராக உடனடியாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக கோப்புகளை சரிபார்க்க வேண்டியிருந்ததால், அவர் பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 7ம் தேதி அறநிலையத்துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் எடப்பாடியை சந்தித்து பிரபாகர் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அறநிலையத்துறை கமிஷனராக பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆணையர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், அறநிலையத்துறை கமிஷனராக பொறுப்பேற்று கொண்டுள்ள பிரபாகர் சொந்த ஊர் சேலம். அவர் நான்கு ஆண்டுகள் ஈரோடு மாவட்ட கலெக்டராகவும், கடந்த 2018 முதல் 2020 வரை கிருஷ்ணகிரி கலெக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Prabhakar ,Commissioner of Charities , Charity Department, Commissioner Prabhakar, Responsibility
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி...