×

திமுக பொதுக்குழுவில் முறைப்படி அறிவித்தார் மு.க.ஸ்டாலின் பொதுச் செயலாளராக துரைமுருகன் பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு: துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ராசா நியமனம்

* திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது.
* அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் மரியாதை.

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். திமுக பொதுக்குழு கூட்டம் வழக்கமாக அரங்கத்தில் வைத்து பிரமாண்டமாக நடத்துவது வழக்கம். மாநிலம் முழுவதும் இருந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி திருவிழா போல நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக முதன் முறையாக காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க 3,500க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவர்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாததால், கூட்டத்தில் பங்கேற்கக்கூடிய திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அணிகளின் மாநில அமைப்பாளர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாவட்டங்களில் உள்ள ஒரு கட்டிடத்தில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு அங்கு காணொலி காட்சி மூலம் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காணொலி காட்சி மூலம் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் கலந்து கொள்ள முடியாது என்பதால் இம்முறை சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் வருகை தந்திருந்தனர்.

கூட்டம் சரியாக காலை 10 மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், திமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. திமுகவில் 1977ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 43 ஆண்டுகளாக பொதுச் செயலாளர் பதவியில் பேராசிரியர் அன்பழகன் பணியாற்றினார். அவரது மறைவுக்குப் பிறகு காலியான பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வானதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வானதாகவும் அறிவித்தார். பின்னர் அவர்களின் தேர்வுக்கு பொதுக்குழுவில் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுகவின் மூத்த நிர்வாகிகள் என்ற அடிப்படையிலும், அனுபவசாலிகள் என்பதாலும் அவர்கள் இருவரையும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனை தேர்வு செய்ய மொத்தம் 218 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர். அதேபோன்று டி.ஆர்.பாலுவை பொருளாளராக தேர்வு செய்ய 125 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர். இதை தொடர்ந்து, திமுக துணை பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதையும் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்தார்.

ஏற்கனவே, துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். தற்போது மேலும் ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதைப்போன்று வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுவதற்கு எடுக்க வேண்டிய வெற்றி வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் தேர்தலை சந்திக்க திமுகவினர் முழு வீச்சில் இப்போதே தயாராக வேண்டும். அதிமுக அரசின் மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்கள் குறித்து மக்களிடம் நேரடியாக எடுத்து சென்று விளக்க வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குகளை பெற வேண்டும் என்று கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி உணவு இடைவெளியின்றி மதியம் 3 மணி வரை என மொத்தம் 5 மணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிந்ததும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : Balu: Ponmudi ,election ,Duraimurugan ,Rasa ,MK Stalin ,Deputy General Secretaries ,DMK General Committee ,Ponmudi ,DR ,Thuraimurugan , In the DMK General Committee, MK Stalin formally announced the appointment of Thuraimurugan as General Secretary, DR Palu as Treasurer and Ponmudi and Rasa as Deputy General Secretaries.
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...